Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் வெற்றி : 3 மணி நேரம் வினியோகிக்க ஆய்வு

Print PDF

தினமலர்              22.08.2013

தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் வெற்றி : 3 மணி நேரம் வினியோகிக்க ஆய்வு

கோவை : கோவை மாநகராட்சியின் 30 வார்டுகளில் சிறுவாணி குடிநீர் தினமும் வினியோகம் செய்யும் திட்டம் வெற்றியடைந்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர்-1, பில்லூர்-2, வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி - குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகள் நிரம்பியுள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்கு தேவைக்கேற்ப குடிநீர் கிடைக்கிறது. இதனால், சிறுவாணி குடிநீர் சப்ளையாகும் பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த முறையை மாற்றி, சிறுவாணி வார்டுகளில் தினமும் குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. கடந்த 18ம் தேதி முதல், பரிச்சார்த்த முறையில், தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பொறியாளர்கள் கூறியதாவது:

சிறுவாணி, பில்லூர்-1, பில்லூர்-2, வடவள்ளி - கவுண்டம்பாளையம் குடிநீர் திட்டம், ஆழியாறு குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் 220 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. சிறுவாணி திட்டத்தில் 96 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைப்பதால், சிறுவாணி குடிநீர் வழங்கும் பகுதிகளில் தினமும் இரண்டு மணி நேரம் குடிநீர் வழங்கப்படுகிறது.

காந்திபார்க், பாரதி பார்க், டாடாபாத், சித்தாபுதூர், வ.உ.சி., பூங்கா, டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மேல்நிலைத்தொட்டிகளில் தினமும் 15 மில்லியன் லட்சம் லிட்டர் குடிநீர் தேக்கப்படுகிறது. ஆர்.எஸ்.புரம், ராம்நகர், சிவானந்தாகாலனி, டாடாபாத், காந்திபுரம், சித்தாபுதூர், காட்டூர், ரேஸ்கோர்ஸ், கோட்டைமேடு, பி.என்.புதூர், கடைவீதி பகுதிகளில் 30 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. பரிச்சார்த்த முறையில் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் வெற்றியடைந்துள்ளது.

குடிசைப்பகுதிகளில், வீட்டு குடிநீர் இணைப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. பொதுக்குழாய் குடிநீரை மட்டும் மக்கள் நம்பியுள்ளனர். அதனால், குடிசைப்பகுதிகளுக்கு திருப்திகரமாக குடிநீர் கிடைக்கவில்லை. தினமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை முறைப்படுத்தி, மூன்று மணி நேரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வுப்பணிகள் நிறைவடைந்ததும், இத்திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.