Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பல்லாவரத்துக்கு குடிநீர் வரும் குழாயில் உடைப்பு குடிநீர் விநியோகம் பாதிப்பு

Print PDF

தினத்தந்தி            31.08.2013

பல்லாவரத்துக்கு குடிநீர் வரும் குழாயில் உடைப்பு குடிநீர் விநியோகம் பாதிப்பு

பல்லாவரத்துக்கு குடிநீர் வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

குழாயில் உடைப்பு

சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி பகுதிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாலாற்று குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பாலாற்று குடிநீர் பைப் லைன் வரும் வழியில் படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரியில் தனியார் கேபிள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சேறும் சகதியுமாக பல்லாவரத்துக்கு குடிநீர் வந்தது. இதையடுத்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, கடந்த 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

குடிநீர் வடிகால் வாரியத்தினர் நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு சென்று குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து சீரமைத்தனர். ஆனால் நேற்று மீண்டும் சேறு கலந்த தண்ணீரே வந்தது.

குடிநீர் விநியோகம் பாதிப்பு

அப்போது வேறு இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டு உள்ளதை கண்டறிந்த குடிநீர் வடிகால் வாரியத்தினர், அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பல்லாவரத்துக்கு குடிநீர் விநியோகம் சீராக மேலும் பல நாட்கள் ஆகும் என தெரிகிறது.

இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘குழாய் உடைப்பு வழியாக சேறு கலந்த தண்ணீர் வந்ததால் குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் விநியோகம் சீராகும்’’ என்றனர்.