Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மானாமதுரையில் ரூ.8.60 லட்சம் செலவில் குழாய்கள் பதிக்கும் பணி

Print PDF

தினமணி             27.09.2013

மானாமதுரையில் ரூ.8.60 லட்சம் செலவில் குழாய்கள் பதிக்கும் பணி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் குடிநீர் திட்ட குழாய்கள் உடைந்துபோய் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.8.60 லட்சம் செலவில் புதிய குழாய்கள் பதித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

   மானாமதுரை நகர் குடிநீர் திட்டம் அருகேயுள்ள ராஜகம்பீரம் வைகையாற்று பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து குழாய்களில் குடிநீர் கொண்டு வரப்பட்டு மானாமதுரை நகரில் பல்வேறு இடங்களிலுள்ள மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி அதன்பின் குழாய் இணைப்புகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

   இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மானாமதுரை சோணையா சுவாமி கோயில் முதல் வேதியரேந்தல் விலக்கு பகுதி வரை சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கியது.

அப்போது நகரில் கன்னார்தெரு மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய் இணைப்புகள் சேதப்படுத்தப்பட்டன.

   இதனால் இந்த மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியாமல் கன்னார்தெரு பகுதியில் உள்ள 3 வார்டு பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இதையடுத்து இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தினமும் டேங்கர் லாரிகள் மூலம் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

   ஆனாலும் இப் பகுதியில் தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் கன்னார் தெரு பகுதி மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில் மானாமதுரை பேரூராட்சி நிர்வாகம் மூலம் கன்னார்தெரு பகுதி குடிநீர் மேல்நிலைத்தொட்டிக்கு குடிநீர் கொண்டுசெல்ல புதிய குழாய்கள் அமைப்பதற்காக பேரூராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.8.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

   இதற்கான பணி இன்னும் ஒருசில நாள்களில் தொடங்கி விரைவில் முடிக்கப்பட்டு கன்னார்தெரு பகுதி மக்களுக்கு குழாய்களில் குடிநீர் சப்ளை செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.