Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூடுதல் குடிநீர் வழங்க கள ஆய்வுப் பணி துவக்கம்

Print PDF

தினமணி           04.10.2013

கூடுதல் குடிநீர் வழங்க கள ஆய்வுப் பணி துவக்கம்

கோவை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்குவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான கள ஆய்வுப் பணியை வேளாண்மைத் துறை அமைச்சர் செ.தாமோதரன் வியாழக்கிழமை துவக்கிவைத்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், சாரதா மில் சாலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மேயர் செ.ம.வேலுசாமி  தலைமை தாங்கினார். தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் செ.தாமோதரன், திட்ட அறிக்கைக்கான கள ஆய்வுப் பணியை தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள வார்டு எண் 87 முதல் 100 வரையிலான 14 வார்டுகளுக்கு சிறுவாணி, ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் நாளொன்றுக்கு 1.5 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.

தற்போது இப்பகுதிக்கு கூடுதலாக குடிநீர் வழங்குவதற்கு பில்லூர் 2-ஆவது குடிநீர் திட்டத்திலிருந்து 60 லட்சம் லிட்டர் உக்கடம் புறவழிச்சாலை வழியாக சாரதா மில் சாலை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வரை புதிதாக குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.

இதுபோல, கவுண்டம்பாளையம், வடவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் வார்டு எண் 5, 6, 7, 8, 9 மற்றும் சிறுவாணி திட்டத்தில் உள்ள வார்டு எண் 16, 17 ஆகிய வார்டுகளுக்கு ஒவ்வொரு நாளும் 1.1 கோடி  லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வார்டுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் மேற்காணும் 7 வார்டு பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைப்பதற்கும் தமிழ்நாடு நீர் முதலீட்டு கழகம் களஆய்வுப் பணி செய்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் க.லதா, ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், கோவை  துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள்  மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், இந்நிகழச்சியில் கலந்து கொண்டனர்.