Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பைப்லைன் உடைப்பால் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது

Print PDF

தினமலர்            25.10.2013

பைப்லைன் உடைப்பால் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது

முதுநகர் : கடலூர் புதுவண்டிப்பாளையத்தில் குடிநீர் பைப் லைனில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த 4 நாட்களாக குடிநீர் விநியோகமின்றி 5 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடலூர் கேப்பர் மலையில் 10க்கும் மேற்பட்ட போர்வெல்கள் அமைக்கப்பட்டு கடலூர் நகர பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கேப்பர் மலையில் இருந்து பைப்லைன் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர் கடலூர் அடுத்த சரவணா நகரில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் ஏற்றப்பட்டு நகராட்சியில் 28வது வார்டு முதல் 33வது வார்டு வரை உள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி புது வண்டிப்பாளையத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்குச் செல்லும் குடிநீர் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வண்டிப்பாளையம், கண்ணகி நகர், சரவணா நகர், குழந்தைக் காலனி, மணவெளி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் மூலம் குடிநீர் பைப் லைன் சீரமைக்கும் பணி நடந்து வந்தது. நேற்று காலை மீண்டும் அதே பகுதியில் மற்றொரு பகுதியில் பைப் லைன் உடைந்து சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஒடியது. நகராட்சி ஊழியர்கள் பைப் லைனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், 4 நாட்களாக நகராட்சியைச் சேர்ந்த 5 வார்டுகளில் குடிநீர் விநியோகமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோன்று, திருப்பாதிரிப்புலியூர் சார் பதிவாளர் அலுவலகம் எதிரில் பைப் லைன் உடைந்து தண்ணீர் ஆறாக ஓடியது.