Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குன்னூரில் கூடுதல் குடிநீர் திட்ட பணிகள் 30 வார்டுகளில் ஏப்ரலில் செயல்படுத்த திட்டம்

Print PDF

தினமலர்          19.11.2013

குன்னூரில் கூடுதல் குடிநீர் திட்ட பணிகள் 30 வார்டுகளில் ஏப்ரலில் செயல்படுத்த திட்டம்

குன்னூர்:குன்னூரில், கூடுதல் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணி துரித கதியில் நடந்து வருகிறது.

தண்ணீர் பஞ்சத்தில், தாளம் போடும் குன்னூர் நகர மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், குன்னூரில் கூடுதல் குடிநீர் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் செயற் பொறியாளர் பாலகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

ஏப்ரலில் செயல்படும்

குன்னூரின் பிரதான நீராதாரமான ரேலியா அணையில் இருந்து கூடுதலாக குடிநீர் இணைப்பு பெற்று, 9.50 கி.மீட்டர் தொலைவில் உள்ள, கிரேஸ்ஹில் நீர் தேக்க தொட்டியில் நிரப்பப்படும்.

அங்கு, 3 நீர்தேக்க தொட்டிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட நீர், அட்டடி, வண்டிச்சோலை, புரூக்லேண்ட், கரடிப்பள்ளம், மோர்ஸ்கார்டன் பகுதிகளில் உள்ள நீர்தேக்க தொட்டிகளில் நிரப்பப்பட்டு, அங்கிருந்து நகர மக்களுக்கு நீர் வினியோகம் செய்யப்படும் வகையில், திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நகரில் உள்ள 30 வார்டு மக்களும் பயன் பெற முடியும்.

"ரேலியா அணையில் இருந்து கிரேஸ்ஹில் நீர் தேக்க தொட்டிக்கு, குழாய் பொருத்தப்பட்டு, நீர் கொண்டு வரப்பட்டு விட்டது; சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி முடியும் தருவாயை எட்டியுள்ளது.

அடுத்தாண்டு, மார்ச் மாதத்துக்குள் பணிகள் நிறைவு பெற்று, ஏப்ரல் மாதம் முதல், நகர மக்களுக்கு நீர் வினியோகம் துவங்கும்' என, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரேலியா அணையே ஆதாரம்

இத்திட்டம் வெற்றி பெற, ரேலியா அணையின் நீர் இருப்பு, திருப்திகரமாக இருக்க வேண்டும். கடந்த காலங்களை போன்று, ரேலியா அணை வறட்சியால் தரை தட்டினால், இத்திட்டத்தின் கீழ் நீரை பெறுவது கடினம். எனவே, ரேலியா அணையை தூர்வாரி, அணையின் கொள்ளளவை அதிகப்படுத்தி, நீர் இருப்பை நிலையாக வைக்க வேண்டிய அவசியம் நகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.