Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

17 இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு: இனி குடிநீர் விரயம் இருக்காது, என நம்பலாம்

Print PDF

தினமலர்             28.11.2013

17 இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு: இனி குடிநீர் விரயம் இருக்காது, என நம்பலாம்

திருப்பூர் : இரண்டாவது குடிநீர் திட்ட குழாய்கள் 17 இடங்களில் உடைந்து குடிநீர் வீணாகி வந்த நிலையில், உடைப்புகளை சீரமைக்கும் பணி பணிகள் நடந்தன. குடிநீர் திட்டத்தை மறு சீரமைப்பு செய்வதே நிரந்தர தீர்வாக அமையும். மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து இரண்டாவது குடிநீர் திட்டம் செயல்படுகிறது. தினமும் 44 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, திருப்பூர் மாநகராட்சி, அவிநாசி, அன்னூர், திருமுருகன்பூண்டி பேரூராட்சிகள் மற்றும் வழியோர ஊராட்சிகளிலுள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டம் கடந்த 1993ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்திலிருந்து 54 கி.மீ., தூரம் குழாய்கள்வழியாக குடிநீர் கொண்டு வரப்பட்டு, 332 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்படுகிறது; மாநகராட்சிக்குள் 9 கி.மீ., நீளத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடிநீர் திட்டம் செயல்படுத்தும் போது, அவிநாசி ரோடு குறுகியதாக இருந்த நிலையில்; போக்குவரத்து வளர்ச்சிக்கு ஏற்ப, ரோடு அகலப்படுத்தப்பட்டது. 21 ஆண்டுகளில், ரோடு விரிவாக்கம் காரணமாக, குழாய் ரோட்டுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

அதிகபட்சம் 13 டன் எடை கொண்ட வாகனங்கள் சென்று வந்த ரோட்டில், 40 டன் எடை வரை எடை கொண்ட வாகனங்கள் செல்வதால், காரணமாக குழாய்கள் பாதிப்படைகின்றன.

குழாய் இணைப்புகளில் உள்ள ரப்பர் வாஷர்கள், 21 ஆண்டு பழையானதாலும், குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், மின் வெட்டு பிரச்னை காரணமாக,"வாட்டர் ஹார்மர்' எனப்படும் அழுத்தம் மாறி, மாறி வரும் சூழல் காரணமாகவும், திட்ட குழாய்களில் பல இடங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டுதினமும் சராசரியாக மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. ரோடு குண்டும், குழியுமாக மாறுவதோடு, போக்குவரத்தும் பாதிக்கிறது. போதிய குடிநீர் கிடைக்காமல், வழியோர மக்களும் பாதிக்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில், அன்னூர் பகுதியில் மூன்று இடங்களிலும், அவிநாசி பகுதியில் இரண்டு இடங்களிலும், திருப்பூர் பகுதியில் 12 இடங்களிலும் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தினமும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வந்தது.இதனால், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக உடைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

குடிநீர் கசிந்த பகுதிகளில் உள்ள ரப்பர் வாசர்கள் மாற்றப்பட்டு, ஒரு சில இடங்களில் கன ரக வாகனங்களால் உடைப்பு ஏற்படாமல் இருக்க, அதிர்வை தாங்கும் கான்கிரீட் தொட்டிகள் கட்டப்பட்டன. சீரமைப்பு பணி காரணமாக வழியோர கிராமங்களில் இரண்டுநாள் குடிநீர் வினியோகம் பாதித்தது. நேற்று காலை பணிகளை நிறைவு பெற்று; குடிநீர் பம்பிங் பணிகள் துவங்கியது. 17 உடைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளதால், இரண்டு லட்சம் குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று முதல் வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு குடிநீர் திட்டம் செயல்படுத்தும் போது அதன் ஆயுட் காலம் 30 ஆண்டுகள் எனவும், மோட்டார்களுக்கு 15 ஆண்டுகளும் நிர்ணயிக்கப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கம் ; கன ரக வாகனங்களால் ஏற்பட்ட உடைப்பு ஆகிய காரணங்களில் அதிகளவு பாதித்த திட்டமாக இது உள்ளது.

திட்டத்தை மறு சீரமைப்பு செய்யவும், எதிர்கால ரோடு விரிவாக்கத்தையும் ஆய்வு செய்து, ரோட்டோரத்தில் மாற்றி அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும். திட்டத்தை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.