Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பூர் மாநகராட்சி குடிநீர் மேம்பாட்டுப் பணிக்கு ரூ. 45 கோடி

Print PDF

தினமணி             21.01.2014

திருப்பூர் மாநகராட்சி குடிநீர் மேம்பாட்டுப் பணிக்கு ரூ. 45 கோடி

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 45 கோடி ஒதுக்கீடு செய்ததற்காக மாமன்றக் கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு மேயர் அ.விசாலாட்சி நன்றி தெரிவித்தார்.

 திருப்பூர் மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணை மேயர் சு.குணசேகரன், ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இதில், மேயர் அ.விசாலாட்சி பேசியது:

 திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகப் பணிகளை சீரமைப்பதற்காக தமிழக முதல்வர் ரூ. 45 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக திட்ட அறிக்கையில் கேட்டபடி, இத் தொகையை முதல்வர் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார்.

இதற்காக முதல்வருக்கு திருப்பூர் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்கான பணிகளை செய்வதற்கு மாமன்றக் கூட்டத்தின் அனுமதி பெறுவதற்காக அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் இதற்கு முழு ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முருகசாமி (அ.தி.மு.க): திருப்பூர் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளில் குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக ரூ. 45 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு மாமன்றத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு உதவியாக இருந்த உள்ளாட்சித் துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஆகியோருக்கும் இதற்கானப் பணிகளுக்கு உடனடியாக திட்ட அறிக்கை தயாரித்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறேன்.

சுப்பிரமணியம் (தி.மு.க): மாநகரில் கொசுத்தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாளையக்காடு பகுதியில் பள்ளிக்குழந்தை சாலையை கடந்து செல்வதற்கு வசதியாக நடை மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும். நகரில் ஆம்னி பஸ்களுக்கு என தனியாக பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

கோவிந்தராஜ் (தே.மு.தி.க): குப்பைப் பிரச்னை தீர்க்கும் வகையில் திருப்பூர் தொழிலதிபர்கள் ஏற்படுத்தி இருக்கும் ஸ்ரீ புரம் அறக்கட்டளை சார்பில், தனியார் அமைப்பு மூலமாக நகரில் உள்ள குப்பை பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் ஆலோசனையும், அது தொடர்பான விளக்க காட்சிகளும் காண்பிக்கப்பட்டது. அவர்களுடன் மாநகராட்சியும் சேர்ந்து குப்பை பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்.

மேயர் அ.விசாலாட்சி: இது தொடர்பாக, அந்த அமைப்பினரை அழைத்து, குப்பை தொடர்பான பிரச்னையை தீர்க்கும் வழிமுறைகள் குறித்த விளக்கக் காட்சிகளையும், ஆலோசனையையும் பெற்று, ஏற்கத்தக்க வகையில் இருப்பின் அது குறித்து பரிசீலிக்கப்படும்.

 கூட்டத்திற்கு பின், மேயர் அ.விசலாட்சி, ஆணையர் கே.ஆர். செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:

 ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 32 கோடி, உள் கட்டமைப்பு இடைவெளி நிரப்புதல் திட்டத்தின் கீழ் ரூ. 13 கோடி என மாநகராட்சி பகுதியில் குடிநீர் விஸ்தரிப்புப் பணிகளுக்காக மொத்தம் ரூ. 45 கோடி தமிழக அரசு வழங்கி உள்ளது.  இதில், முதலாவது மண்டலத்தில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படும். 3 இடங்களில் நில மட்ட நீர்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படும்.

 மாநகராட்சியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பகுதிகளில், ஏற்கனவே உள்ள குடிநீர் விநியோகக் குழாய்களை அகற்றி, அதற்கு பதிலாக 4 இஞ்ச், 8 இஞ்ச் விட்டமுள்ள குடிநீர் விநியோகக் குழாய்கள் பதிக்கப்படும். இதன் மூலமாக, 6 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கும் நிலை மாறி, 2 நாள்களுக்கு ஒருமுறை அல்லது தினமும் குடிநீர் விநியோகிக்க வழிவகை ஏற்படும்.

 குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கும் இப் பணிகள் திட்டத்தின் ஒரு பகுதி தான். விடுபட்ட பகுதிகளிலும் இப் பணிகள் செய்வதற்கு திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  ரூ. 45 கோடி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் வரும் 3 மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படும். இதில், மேல்நிலைக்குடிநீர் தொட்டி கட்டும் பணி மட்டும் 6 மாத அவகாசத்தில் செய்து முடிக்கப்படும் என்றனர்.