Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு புதிய குடிநீர்த் திட்டம்

Print PDF

தினமணி             23.01.2014 

நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு புதிய குடிநீர்த் திட்டம்

 நாமக்கல் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிப் பகுதி மக்களுக்காக ரூ.161.15 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  இதற்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் மாநில அளவிலான தொழில்நுட்பக் குழு கடந்த 17-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

நாமக்கல் நகராட்சி அருகேயுள்ள கொண்டிச்செட்டிப்பட்டி, கொசவம்பட்டி, பெரியபட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, முதலைப்பட்டி, சின்னமுதலைப்பட்டி ஆகிய 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 2011-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக நகராட்சியின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. தற்போது 39 வார்டுகளுடன் நகராட்சி செயல்படுகிறது.

ஏற்கெனவே இருந்த 30 வார்டு பகுதிகளில் மட்டும் தினமும் நபருக்கு 135 லிட்டர் காவிரிக் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், இணைக்கப்பட்ட 9 ஊராட்சிப் பகுதி மக்களுக்கு தினமும் ஒரு நபருக்கு 45 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் ஏற்பட்டு வரும் குடிநீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இணைக்கப்பட்ட 9 ஊராட்சிப் பகுதிகளுக்காக மட்டும் ரூ.161.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஜேடர்பாளையம் - நாமக்கல் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த நாமக்கல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் மாநில அளவிலான தொழில்நுட்பக் குழு கடந்த 17-ஆம் தேதி ஒப்புதல் அளித்திருப்பதாக ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது:

புதிய குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அரசிடம் இருந்து நிதி பெறப்பட்டு குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, நாமக்கல் நகராட்சிக்கு தினமும் கூடுதலாக 309 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு வர முடியும். இதன்மூலம் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிப் பகுதியில் தினசரி நபருக்கு 135 லிட்டர் காவிரி குடிநீர் வழங்கப்படும்.

இந்த குடிநீர்த் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் வரை இடைப்பட்ட வறட்சிக் காலத்தில் சீரானக் குடிநீர் விநியோகம் செய்ய மோகனூர் நீரேற்று நிலையம், அணியாபுரம் நீருந்து நிலையம் ஆகியவற்றில் ரூ.1.78 கோடியில் புதிய மோட்டார்கள் அமைக்கவும், இதுவரை பெறப்படும் குடிநீரைத் தேக்குவதற்கு ரூ.50 லட்சம் செலவில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைத் தள தொட்டிகள் 5 இடங்களில் அமைத்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யவும், பெறப்படும் குடிநீர் அளவுகளைக் கண்காணிக்க நாமக்கல் நகராட்சி வளாகத்திலுள்ள பிரதானக் குடிநீர் தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பில் கருவி பொருத்தப்படும் என மொத்தம் ரூ.3.03 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார் அவர்.

நாமக்கல் நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன், ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.