Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரையில் பிப். 3 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை

Print PDF

தினகரன்             01.02.2014

மதுரையில் பிப். 3 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் சப்ளை

மதுரை, :வைகை அணை நீர்மட்டம் சரிந்துள்ளதால் 3ம் தேதி முதல் மதுரை நகரில் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குழாயில் குடிநீர் சப்ளை செய்யப்படும் என மாநகராட்சி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மதுரை நகரில் சப்ளையாகும் குடிநீருக்கும், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்ட நீரும் வைகை அணையில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 35.56 அடியாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 49.80 அடி இருந்தது. முல்லை பெரியாறு அணையில் 111.30 அடியாக குறைந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் 113 அடி இருந்தது. தற்போதைய நிலையில் பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரில் ஒரு சொட்டு கூட வை கைக்கு வந்து சேரவில்லை.

தென்மேற்கு பருவ மழை ஜூன் மாதம்தான் ஆரம்பமாகும் நிலையில் தற்போதைய நிலவரப்படி வைகையில் ஏப்ரல், மே கோடை வரை குடிநீருக்கு இருப்பு இல்லை. அணை நீர்மட்டம் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால். இப்போதே குடி நீர் சப்ளை அளவு குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக தினமும் 60 கன அடி வீதம் திறக்கப்பட்டு வந்தது. இதை 40 கன அடியாக குறைத்துள்ளனர். வைகை ஆறு வறண்டு கிடப்பதால், அதிலுள்ள குடிநீர் திட்ட கிணறுகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் அளவும் குறைந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் ராஜன்செல்லப்பா நிருபர்களிடம் கூறியதாவது:

மதுரை நகரில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. வைகை அணையில் நீர் இருப்பு குறைந்து தற்போது 640 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது. இதை வைத்து மே இறுதி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வழங்க இயலாது. எனவே 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் குழாயில் குடிநீர் சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி வழங்கினால் 90 நாட்களுக்கு சமாளிக்க வாய்ப்புள்ளது.

இதுதவிர மண்டலத்திற்கு 125 போர்வெல் வீதம் மொத்தம் 500 போர்வெல் அமைக்கப்பட உள்ளது. நகரை சுற்றிலும் 55 தனியார் கிணறுகளில் இருந்து குடிநீர் எடுத்து சப்ளை செய்து கோடையை சமாளிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு கூறினார். ஆணையர் கிரண்குராலா, நகர பொறியாளர் மதுரம் உடன் இருந்தனர்.

பிப்ரவரி 3ம் தேதி (நாளை மறுநாள்) முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யும் திட்டத்தை அமலாக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி தற்போது 2 நாட்களுக்கு ஒரு முறை குழாயில் வரும் குடிநீர் 4 நாட்களுக்கு ஒரு முறை தான் வரும். லாரிகள் மூலம் சப்ளை எத்தனை நாட்களுக்கு ஓரு முறை என்பது ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்.

மாநகராட்சியின் இந்த அபாய சங்கு, கோடைக்கு 2 மாதங்களுக்கு முன்பே குடிநீர் பஞ்சமா என மதுரை மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.