Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஊராட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை

Print PDF

தினமணி 22.12.2009

தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஊராட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை

விருதுநகர், டிச. 21: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு பேரூராட்சிகள் மற்றும் 1759 ஊரகக் குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்று நீராதாரமாகக் கொண்டு செயல்படுத்தவுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டம் குறித்து அனைத்து ஊராட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச. 22) நடைபெறுகிறது. இதற்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

இம் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகள் மற்றும் 1759 ஊரகக் குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கூடல், சீவலப்பேரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திóல வல்லநாடு ஆகிய இடங்களில் நீராதாரம் தேர்வு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முக்கூடல் அருகே உத்தேசிக்கப்பட்டுள்ள நீராதாரத்திலிருந்து ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்ராயிருப்பு ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 445 ஊரகக் குடியிருப்புகளுக்கும், 7 பேரூராட்சிகளுóக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும் சீவலப்பேரி அருகே உள்ள நீராதாரத்திலிருந்து விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 804 ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளது.

வல்லநாடு அருகில் உள்ள நீராதாரத்திலிருந்து அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 510 ஊரக குடியிருப்புகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யபபடும்.

தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் இக் குடிநீர்த் திட்ட விநியோகத்துக்காக தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து, 450 ஊராட்சிகளில் உள்ள அனைத்துக் குடியிருப்புகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஊராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் தரை மட்ட நீர்தேக்கத் தொட்டி அமைக்கும் இடம் முடிவு செய்யப்படும். அதனால் இதன் தலைவர்கள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஆட்சியர் (பொ) கணேசன்.