Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வரி ஏய்ப்பு: தனியார் மண்டபத்தின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமணி 23.12.2009

வரி ஏய்ப்பு: தனியார் மண்டபத்தின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருப்பூர், டிச.22: மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை 5 ஆண்டுகளாக செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வந்த தனியார் மண்டபத்தின் குடிநீர் இணைப்பை மாநகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை துண்டித்தனர்.

இதேபோல், மாநகராட்சி முழுவதும் தொடர்ந்து வரிசெலுத்தாமல் ஏமாற்றம் செய்துவருவோரின் குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சியின் 2009-10ம் ஆண்டுக்கான சொத்துவரி ரூ.21.5 கோடி, குடிநீர்க் கட்டணம் ரூ.4 கோடி, தொழில் வரி ரூ.1 கோடி கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதியாண்டு முடிவடைய இன்னும் 3 மாதங்களே உள்ளதால் வரி வசூலிக்கும் பணியை மாநகராட்சி நிóர்வாகம் தீவிரப்படுத்தயுள்ளது. அதன்படி, இதுவரை சொத்து வரி ரூ.7.5 கோடியும், குடிநீர் கட்டணம் ரூ.2 கோடியும், தொழில்வரி ரூ.50 லட்சமும், இதர வரியினங்கள் 70 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலுவையில் உள்ள வரியினங்களை வசூலிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த நிதியாண்டுகளில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களைத் தொடர்ந்து செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருபவர்களின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, திருப்பூர் 35வது வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.புதூரில் உள்ள ஒரு திருமண மண்டப நிர்வாகத்தினர் கடந்த 5 ஆண்டுகளாக சொத்துவரி, குடிநீர் கட்டணம் என மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சுமார் ரூ.45 ஆயிரம் வரித்தொகையை இதுவரை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி உத்தரவின் பேரில் உதவி செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை அம்மண்டபத்தின் குடிநீர் இணைப்பைத் துண்டித்தனர்.

இதேபோல், மாநகராட்சி முழுவதும் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்துவருவோரின் குடிநீர் இணைப்பைத் துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் விரைவில் அதற்கான நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை தவிர்க்குமாறு மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.