Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில் குடிநீர் கட்டணம் குபீர்: புதிய திட்டம் முடிந்த பின் அமல்

Print PDF

தினமலர் 30.12.2009

கோவையில் குடிநீர் கட்டணம் குபீர்: புதிய திட்டம் முடிந்த பின் அமல்

கோவை : கோவை மாநகராட்சியில் குடிநீர் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படுகிறது. இதற்கான தீர்மானத்துக்கு மாநகராட்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. கோவை மாநகராட்சியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் 113 கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பில் பில்லூர் 2வது குடிநீர்த் திட்டப்பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. அடுத்த ஆண்டில் இந்த பணி முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பணி முடியும்போது, திட்ட மதிப்பீடு 140 கோடி ரூபாயாக உயரும் என தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் பெற்ற 113 கோடியே 74 லட்ச ரூபாயில் 70 சதவீதத்தொகை, மத்திய அரசு (50%) மற்றும் மாநில அரசு (20%) மானியமாக வழங்குகின்றன. கட்டணம் உயர்வு: மீதமுள்ள தொகையில் 30 சதவீதத்தையும், கூடுதல் ஒப்பந்தத் தொகையுடன் சேர்த்து 50 கோடி ரூபாய்க்கும் மேலாக மாநகராட்சி குடிநீர் நிதியிலிருந்து திட்டத்துக்கு மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக, குடிநீர் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் மாநகராட்சி உள்ளது. இதற்காக, நகராட்சிகள் நிர்வாக தலைமைப் பொறியாளரால் குடிநீர் கட்டணம் மற்றும் டெபாசிட் தொகை திருத்தி வழங்கப்பட்டுள்ளது. புதிய கட்டண அட்டவணை, கவுன்சில் ஒப்புதலுக்காக நேற்று வைக்கப்பட்டது.

புதிய குடிநீர் கட்டண விபரம் (பழைய கட்டணம் அடைப்புக்குறிக்குள்): இதன்படி, வீட்டு உபயோகத்துக்கு 7500 லிட்டர் வரை ரூ.4.50 (ரூ.3.50) ஆகவும், 7501-10 ஆயிரம் லிட்டர் வரை, ரூ.6 (ரூ.4), 10 ஆயிரத்து ஒரு லிட்டரிலிருந்து ஒன்றரை லட்சம் லிட்டர் வரை ரூ.8 (ரூ.5), அதற்கும் அதிகமாக பயன் படுத்துவோருக்கு ரூ.11 (ரூ.6.50) ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பொது நிறுவனங்களுக்கு (20 எம்.எம்.விட்டம் அதிக அளவிலான குழாய் இணைப்புக்கு) 7500 லிட்டருக்கு தற்போது 3 ரூபாய் 50 பைசாகவுள்ள கட்டணம், 5 ரூபாய் 25 பைசாவாக உயர்கிறது. இதற்கும் அதிகமான அளவுக்கு வீட்டு உபயோகக் குழாய் அளவிலான கட்டணமே வசூலிக்கப்படும். வீட்டு உபயோக குழாய்க்கு ஒரு மாத குறைந்த பட்ச கட்டணம், ரூ.120 (ரூ.80), குடிநீர் கட்டண டெபாசிட் தொகை ரூ.5000 (ரூ.1000) ஆக உயர்கிறது.

பொது நிறுவனங்களுக்கு ஒரு மாத குறைந்த பட்ச கட்டணம், ரூ.900 (ரூ.600), டெபாஸிட் தொகை ரூ.10 ஆயிரம் (ரூ.3000) ஆக உயர்த்தப்படுகிறது. பிற உபயோகத்துக்கு: வீட்டு உபயோகம் அல்லாத முறையில் வழங்கப்படும் குடிநீருக்கு, ஒரு மாத உபயோக அளவில் 7500 லிட்டர் வரை 7 ரூபாயாகவுள்ள கட்டணம், 10 ரூபாய் 50 பைசாவாகவும், 7501லிட்டரிலிருந்து 10 ஆயிரம் லிட்டர் வரை 9 ரூபாயிலிருந்து 13 ரூபாய் 50 பைசாவாகவும் உயர்கிறது. 10 ஆயிரத்து ஒன்று லிட்டரிலிருந்து ஒன்றரை லட்சம் லிட்டர் வரை, தற்போது 12 ரூபாயாகவுள்ள கட்டணம், 18 ரூபாயாகவும், ஒன்றரை லட்சம் லிட்டருக்கு மேல் பயன் படுத்துவோருக்கு தற்போதுள்ள 15 ரூபாய் கட்டணம், 22 ரூபாய் 50 பைசாவாகவும் உயரும். ஒரு மாத குறைந்த பட்ச கட்டணம், 350 ரூபாயிலிருந்து 525 ரூபாயாகவும், குடிநீர் கட்டண டெபாஸிட் தொகை 3000 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது நிறுவனங்களுக்கும் இதே அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், ஒரு மாத குறைந்த பட்ச கட்டணம் 900 ரூபாயிலிருந்து 1350 ரூபாயாகவும், குடிநீர் கட்டண வைப்புத் தொகை 3000 ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.

.தி.மு.. எதிர்ப்பு: புதிய குடிநீர்த் திட்டம் நடைமுறைக்கு வரும் முன்பே, இத்திட்டத்துக்கு நிதி ஆதாரச் சான்றில் குறிப்பிட்டுள்ளவாறு குடிநீர் கட்டணத்தை உயர்த்துமாறு நகராட்சி நிர்வாக அலுவலகம் நிபந்தனை விதித்திருந்தது. இந்த தீர்மானத்தை அ.தி.மு.., மா.கம்யூ., இந்திய கம்யூ., கட்சிகள் எதிர்த்தன. கோவை நகரில் குடிநீர் விநியோகத்தில் பெரும் குறைபாடுகள் இருக்கும் நிலையில், 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் நடைமுறைக்கு வந்த பின்பே, புதிய குடிநீர் கட்டணத்தை அமல் படுத்த வேண்டுமென்று தி.மு.., கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இந்த நிபந்தனையுடன் குடிநீர் கட்டண உயர்வு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Wednesday, 30 December 2009 06:45