Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிக்கான இடங்கள் ஆய்வு!. 2010 மார்ச் மாதம் துவங்க துரித நடவடிக்கை

Print PDF

தினமலர் 31.12.2009

ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிக்கான இடங்கள் ஆய்வு!. 2010 மார்ச் மாதம் துவங்க துரித நடவடிக்கை

தர்மபுரி: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கான ஆரம்ப கட்ட பணிகளான திட்டம் நிறைவேற்றும் பகுதி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாதம் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட புவி அமைப்புப்படி நிலத்தடி நீரில் அதிக அளவில் ஃப்ளோரைடு உள்ளது. இதனால், இந்த நீரை பருகுவோருக்கு பல் கரைபடிதல், எலும்பு, தோல், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்ட மக்களின் ஆயுள் நாட்கள் குறைவதாக டாக்டர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இவ்விரு மாவட்ட மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் திட்டம் கொண்டு வர 50 ஆண்டாக தமிழக அரசு முயற்சி எடுத்தும், திட்டத்துக்கான நிதி மற்றும் திட்ட பணிக்கான தொழில் நுட்ப பிரச்னைகள் காரணமாக 50 ஆண்டுகள் திட்ட பணிகள் தள்ளி போய் வந்தது. ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகள் கொடுத்த நிலையில், கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் தி.மு.., அரசு ஆட்சிக்கு வந்தால் திட்டத்தை நிறைவேற்ற உறுதி கொடுத்தது. ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து திட்டத்தை நிறைவேற்ற ஜப்பான் பன்னாட்டு வங்கி குழுவிடம் கடன் உதவி பெற முயற்சிகள் எடுக்கப்பட்டு, கடந்தாண்டு திட்டத்தை நிறைவேற்ற கடன் உதவி வழங்கிட ஜப்பான் பன்னாட்டு வங்கி ஒப்புதல் வழங்கியது.

கடந்தாண்டு (2008) பிப்ரவரி 26ம் தேதி தர்மபுரியில் நடந்த விழாவில், முதல்வர் கருணாநிதி 1,334 கோடியில் திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. உலகளவிய ஐந்து தொகுப்பாக டெண்டர் விடும் பணியில் தொய்வு ஏற்பட்ட லையில் இத்திட்டத்துக்கான திட்ட மதிப்பீடு தற்போது 1,928 கோடியே 80 லட்சமாக உயர்ந்துள்ளது. ஐந்து தொகுப்பு டெண்டரில் முதல் தொகுப்புக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு, ஜப்பான் பன்னாட்டு வங்கி குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொகுப்பு இரண்டு, மூன்று மற்றும் ஐந்துக்கான டெண்டர் விடுவதற்கான நடவடிக்கைகள் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிற நான்கு தொகுப்புக்கான டெண்டர் பணிகள் முடிக்கப்பட்டு, ஜப்பான் பன்னாட்டு குழு ஒப்புதல் பெற்று திட்ட பணிகளை வரும் மார்ச் மாதம் முதல் துவங்க குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தர்மபுரியில் இருந்து 45 கி.மீ., தூரத்தில் உள்ள காவிரியில் இருந்து தண்ணீரை பம்பிங் செய்து, அங்கிருந்து 6.2 கி.மீ., தூரத்தில் உள்ள வனப்பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் 1,500 மி.மீட்டர் விட்டமுள்ள இருப்பு குழாய் மூலமாக ஆற்று நீர் கொண்டு செல்லப்படுகிறது.

பின் 12 ஏக்கர் பரப்பில் 127.6 (எம்.எல்.டி) மில்லியன் லிட்டர் கொள்ளவுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முழுமையாக தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, 1,800 மீட்டர் தூரத்தில் உள்ள இடைநிலை நீருந்து நிலையத்துக்கு 1,500 மி.மீட்டர் இரும்பு குழாய் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது. இடைநிலை நீருந்து நிலையத்தில் இருந்து மடம் பகுதியில் 240 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்டு குடிநீர் சேகரிப்பு தரை மட்ட தொட்டி கட்டப்பட்டு அங்கிருந்து பிரதான குழாய்கள் மூலம் குடிநீர் பல பகுதிக்கும் பிரித்து கொடுக்கப்படுகிறது. முதல் கட்டமாக ஆற்றுப்படுகையில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் குழாய் பகுதி, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடம், மடம் பகுதியில் தரைமட்ட தொட்டி அமைக்கும் இடம் ஆகிய பகுதி நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு, நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. திட்ட பணிகள் நடக்கும் பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அறிவிப்பு பலகைகள் தற்போது, முதல் கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு வரும் மார்ச்சில் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated on Thursday, 31 December 2009 07:04