Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூரில் 2 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை: ஆணையர்

Print PDF

தினமணி 31.12.2009

வேலூரில் 2 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை: ஆணையர்

வேலூர்,டிச.30: வேலூர் நகராட்சி பகுதியில் 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வேலூர் மாநகர்மன்ற கூட்டத்தில் ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.

மாநகர்மன்ற கூட்டம் புதன்கிழமை மேயர் ப. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் செல்வராஜ், துணை மேயர் தி.. முகமது சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வேலூரில் குடிநீர் விநியோகிக்கும் நேரத்தை முன்கூட்டியே தெரிவித்தால் பொதுமக்கள் காத்திருந்து தண்ணீர் பிடிக்க ஏதுவாக இருக்கும் என்று மதிமுக உறுப்பினர் நீதி கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த ஆணையர் செல்வராஜ், 15 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் 3 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இனி 2 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். லாங்கு பஜாரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உறுப்பினர் ஜி.ஜி. ரவி கேட்டுக் கொண்டார். அவர்களுக்கு மாற்று இடம் ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தலாம் என்று மேயரும், ஆணையரும் கூறினர்.

நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியில் என்ன செய்தாலும் தடுக்க முடியவில்லை என்று பி.பி. ஜெயபிரகாஷ் புகார் தெரிவித்தார்.

இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் செய்யலாம் அல்லது பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்றார் மேயர்.

வேலூரில் போக்குவரத்து சிக்கலை நெறிப்படுத்த ஆட்டோக்களை வரைமுறைப் படுத்த வேண்டும் என்று பாலசுந்தரமும், எம்ஜிஆர் நகரில் கழிப்பிடத் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் வருகிறது என்று சண்முகமும் தெரிவித்தனர்.

மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள கணினிகள் எத்தனை செயல்படுகிறது என்று தெரியவில்லை, கோட்டை சுற்றுச்சாலையில் எக்ஸ்னோராவுக்கு இடம் ஒதுக்கி, குப்பையை எருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அது செயல்படாமல் பூட்டப்பட்டுள்ளது என்று சீனிவாசகாந்தி கேள்வியெழுப்பினார்.

கணினிகள் தொடர்ந்து பராமரிக்கும் வகையில் தான் விற்பனையாளரிடம் ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது. எக்னோராவுக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆணையர்.

சாலை, குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் பெற்று 4 மாதங்களாகியும் பணிகள் தொடங்கவில்லை என்று பிச்சமுத்து குற்றம் சாட்டினார். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் தெரிவித்தார். அதையடுத்து கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Thursday, 31 December 2009 09:56