Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கர்நாடகத்தில் குடிநீர் கட்டணம் உயருகிறது: அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு தகவல்

Print PDF

தினமணி 04.01.2010

கர்நாடகத்தில் குடிநீர் கட்டணம் உயருகிறது: அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு தகவல்

பெங்களூர், ஜன.3: கர்நாடகத்தில் குடிநீர்க் கட்டணம் விரைவில் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு தெரிவித்தார்.

குடிநீர், வடிகால் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான அவர் பெங்களூரில் நிருபர்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் குடிநீர்த் தேவை மற்றும் விநியோகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில் அரசுக்கு சில பிரச்னைகளும் சிரமமும் ஏற்பட்டு வருகிறது.

பெங்களூர் குடிநீர் விநியோக மற்றும் வடிகால் வாரியத்துக்கு தற்போது 50 சதவிகிதம் வருமானம் குறைந்துள்ளது.

இந்த பிரச்னைகளை சமாளிக்கவும், மக்களுக்குப் போதுமான அளவு குடிநீர் விநியோகிக்கும் நோக்கிலும் கர்நாடகத்தில் குடிநீர்க் கட்டணம் விரைவில் உயர்த்தப்படும். தனியார்நிறுவனங்கள் மற்றும் அறிவியல் அமைப்புகள் மூலம் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மானியம் வழங்கும்.

பெங்களூரில் உள்ள அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் பயன்பாட்டில் இல்லை. ஆனாலும் சில போர்வெல்களில் 24 மணி நேரமும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, போர்வெல்களைப் பராமரித்து கண்காணிக்க 10 போர்வெல்களுக்கு ஒரு பொறியாளர் வீதம் நியமிக்கப்படுவர். போர்வெல் தண்ணீரைப் குறிப்பிட்ட கால நேரங்களில் பயன்படுத்த விதிமுறைகள் கொண்டுவரப்படும்.

பெங்களூரில் உள்ள ஏரிகளின் ஆழம் அதிகரிக்கப்படும். இதன் மூலம் மழை காலங்களில் அதிக தண்ணீரை சேமிக்கலாம். மழை நீரை அதிக அளவு சேமித்து முறையாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூர் நகரின் குடிநீர்த் தேவையை சமாளிக்க புறநகர்ப் பகுதிகளில் அணைக்கட்டுகள் கட்டப்படும் என்றார்.

Last Updated on Monday, 04 January 2010 09:32