Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய குடிநீர்த் திட்டப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் நிறைவு

Print PDF

தினமணி 06.01.2010

புதிய குடிநீர்த் திட்டப் பணிகள் மார்ச் மாதத்துக்குள் நிறைவு

நாமக்கல், ஜன. 5: நாமக்கல் நகராட்சிப் பகுதி மக்களுக்கான ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய குடிநீர்த் திட்டப் பணிகள், மார்ச் இறுதிக்குள் நிறைவு பெறும் என மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் செ. காந்திச் செல்வன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் நகராட்சி மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

நாமக்கல் நகராட்சி 3-வது குடிநீர்த் திட்டப் பணிகளுக்காக நகரில் 6 இடங்களில் குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மார்ச் மாதத்துக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ஏப்ரல் முதல் புதிய குடிநீர்த் திட்டத்தில் மக்கள் பயன்பெறலாம்.

இத் திட்டம் அமலுக்கு வந்தால் நகராட்சிப் பகுதி மக்களின் தண்ணீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும். நகரில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 80 சதம் முடிவடைந்துள்ளன. இத் திட்டத்துக்காக சேந்தமங்கலம் சாலையில் உள்ள நகராட்சி மயானப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

ரூ. 3.71 கோடி மதிப்பில் மக்காத குப்பையை அறிவியல் ரீதியாக அழிக்கும் வகையில் லத்துவாடியில் கிடங்கு அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகளும் 6 மாத காலத்தில் முடிவடையும் என்றார் அவர். முன்னதாக, நகராட்சி அலுவலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், சேந்தமங்கலம் சாலையில் உள்ள நவீன எரிவாயு தகனமேட்டை, கொசவம்பட்டி, லத்துவாடி பகுதிகளில் அமைக்கப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்குகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

Last Updated on Wednesday, 06 January 2010 10:06