Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நிலத்தடி நீரை செறிவூட்டும் பெருந்திட்டம் பொதுமக்கள் ஒத்துழைக்க கலெக்டர் அழைப்பு

Print PDF

தினமலர் 08.01.2010

நிலத்தடி நீரை செறிவூட்டும் பெருந்திட்டம் பொதுமக்கள் ஒத்துழைக்க கலெக்டர் அழைப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நிலத்தடி நீரை செறிவூட்டும் பெருந்திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கலெக்டர் சண்முகம் பேசியதாவது: மிக வேகமாகவும், கட்டுப்பாடற்ற முறையிலும் நிலத்தடி நீர் உபயோகப்படுத்தப்பட்டு வருவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. கிடைக்கும் நீரின் தரமும் திருப்தியாக இல்லை. கடலோர பகுதிகளில் நிலத்தடி நீரை அதிக அளவில் உபயோகிப்பதன் மூலம் கடல் நீர் உட்புகுதல் ஏற்படுகிறது. இதை சரி செய்யும் பொருட்டு மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள நீரை நிலத்தடிக்கு கொண்டு செல்வது அவசியமாகும்.

பல ஆண்டாக வாய்கால்களில் இருந்து குளங்களுக்கு நீரை எடுத்துச் சென்று சேமிப்பதன் மூலமாக கிராமப்பகுதிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தமிழக அரசு செயற்கை முறையில் நிலத்தடி நீரை செறிவூட்டம் செய்ய நீர்வள ஆதாரத்துறை, நிலத்தடி நீர்த்துறை, வேளாண் பொறியியல் துறை, வனத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்த பெரும் திட்டம் வகுத்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நீர்வள ஆதார துறை மூலம் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஆழ்குழாய் கிணறுகள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மழைநீர், வெள்ளநீர் கூழாங்கற்கள் மற்றும் மணலால் சுத்தம் செய்யப்பட்டு குழாய் மூலம் நிலத்தடிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வகையில் தலா இரண்டு லட்சம் செலவில் 50 ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகள், செறிவூட்டும் நிலையங்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் உபயோகத்தில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் நிலையங்கள் தலா 60 ஆயிரம் ரூபாய் செலவில் நான்கு நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாய பொறியியல் துறையின் சார்பில் தலா 30 ஆயிரம் செலவில் 70 ஆழ்குழாய் கிணறு நிலத்தடி நீர் செறிவூட்டும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மழைநீரை சேகரிக்க இத்துறை மூலம் 50 ஆயிரம் ரூபாய் செலவில் 104 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பண்ணைக்குட்டைகள் அமைக்க பத்து சதவீதம் மட்டுமே நில உரிமையாளர்களுக்கு செலவாகும். 90 சதவீத செலவை அரசு ஏற்று பணணைக்குட்டைகள் அமைத்து தரப்படும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு 95 சதவீதம் அரசு மானியம் வழங்கும். கிராமப்புறங்களில் உள்ள புறம்போக்கு நிலங்களில் தலா 1.50 லட்சம் செலவில் பத்து கிராம குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.


எனவே, பொதுமக்கள் வருங்கால சந்ததியினருக்கு நல்ல நீரை வழங்க நீரை அசுத்தம் செய்யாமலும், தங்களுக்கு தேவையான அளவுக்கு மட்டும் நீரை உபயோகித்தும், மழை நீரை சேகரிக்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். மாவட்ட வன அலுவலர் துரைச்சாமி, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சண்முகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கலியபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 08 January 2010 07:58