Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: ரூ. 237 கோடி மதிப்பீட்டில் முதல் கட்டப் பணிகளுக்கு அனுமதி

Print PDF

தினமணி 29.01.2010

ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: ரூ. 237 கோடி மதிப்பீட்டில் முதல் கட்டப் பணிகளுக்கு அனுமதி

சென்னை, ஜன.28: ரூ. 237 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை நிறைவேற்ற ஹைதராபாத் நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டம் நிறைவேறுமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவரும் நிலையில், திட்டத்துக்கான பணிகளுக்கு அனுமதி அளித்திருப்பது கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துமெனகருதப்படுகிறது.

இது குறித்து வியாழக்கிழமை தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரூ. 237.18 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை மேற்கொள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த ".வி.ஆர்.சி.எல் இன்ப்ராஸ்ட்ரக்சர்' என்ற நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நீர் உள்வாங்கும் கட்டமைப்பு, இயல்பு நீர் உந்து உறை, இயல்பு நீர் இறைப்பான், இயல்பு நீர் உந்துக்குழாய், நாளொன்றுக்கு 156 மில்லியன் லிட்டர் திறனுடைய சுத்திகரிப்பு நிலையம், சுத்திகரிக்கப்பட்ட நீர் கடத்தும் குழாய், நீர் உந்து நிலையம், 240 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள நீர்தேக்கத் தொட்டி, மின்னணு தகவல் பரிமாற்றம் மற்றும் குறிப்பு சேகரித்தல் ஆகியவை முதல் கட்டப் பணிகளில் அடங்கும்.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,755 ஊரகக் குடியிருப்புகளில் உபயோகிக்கப்படும் குடிநீரில் ப்ளோரைடு உப்புகளின் அளவு 1 லிட்டர் குடிநீரில் 1.5 முதல் 12.4 மில்லிகிராம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மத்திய சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனத்தின் வரையறைப்படி 1 லிட்டர் குடிநீரில் 1.5 மில்லிகிராம் மட்டுமே ப்ளோரைடு உள்ளது. பல ஆண்டுகளாக ப்ளோரைடு கலந்த குடிநீரைப் பருகி வருவதால் இம்மாவட்டங்களில் உள்ள மக்கள், மூட்டு, முதுகெலும்பு, கைகால் ஆகியன வளைதல், முடக்குவாதம், பற்கள் காவியாதல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த இரு மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்கள் என்பதால் கோடைக்காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்படுகிறது. எனவே ப்ளோரைடு பாதிப்பில் இருந்து தடுக்கவும், தேவையான குடிநீர் வழங்கவும் ரூ. 1,928.80 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை 5 கட்டங்களில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் பேர் பயன்பெறுவர் என்று அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.