Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

3வது கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கூடுதலாக 1.90 கோடி லிட்டர் குடிநீர்

Print PDF

தினமணி 29.01.2010

3வது கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கூடுதலாக 1.90 கோடி லிட்டர் குடிநீர்

திருப்பூர், ஜன.28: மக்கள்தொகை பெருக்கத்தை அடுத்து திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 ஊராட்சிகள், 2 நகராட்சிகளுக்கு 3வது கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கூடுதலாக 1.90 கோடி லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் மு..ஸ்டாலினிடம் திருப்பூர் எம்எல்ஏ சி.கோவிந்தசாமி வலியுறுத்தியுள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு கொண்டுவரப்படும் 3வது கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிபாளையம், தொட்டியபாளையம், வீரபாண்டி, நெருப்பெரிச்சல், தொட்டியமண்ணரை, முதலிபாளையம், முருகம்பாளையம், ஆண்டிபாளையம், இடுவாய், மங்கலம், முத்தணம்பாளையம் ஆகிய 11 ஊராட்சிகள் மற்றும் 15வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகளுக்கு தற்போது நாளொன்றுக்கு 1,58,47,000 லிட்டர் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாநகரையொட்டி அமைந்துள்ள இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு இக்குடிநீர் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது மக்கள்தொகை பெருமளவில் அதிகரித்துள்ளதை அடுத்து இக்குடிநீர் போதுமானதாக இல்லாததால் சுமார் 10 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், நிலவும் குடிநீர் பற்றாக்குறையை அடுத்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, தற்போதைய மக்கள்தொகை, எதிர்காலத்தில் அதிகரிக்கும் மக்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 3வது கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் திருப்பூர் மாநகரையொட்டி அமைந்துள்ள அந்த 11 ஊராட்சிகளுக்கு 1,35,08,000, 15 வேலம்பாளையம் நகராட்சிக்கு 30 லட்சம், நல்லூர் நகராட்சிக்கு 25 லட்சம் என மொத்தம் 1,90,08,000 லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்க வேண்டும் என்று அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலினை நேரில் சந்தித்த திருப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கோவிந்தசாமி இதுகுறித்து கோரிக்கையை முன்வைத்தார். கோரிக்கையை ஏற்ற துணை முதல்வர் அந்த ஊராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ததாக எம்எல்ஏ கோவிந்தசாமி தெரிவித்தார்.