Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வைகை 2-வது கூட்டுக் குடிநீர் விநியோகப் பணிகள்: மதுரையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு

Print PDF

தினமணி 29.01.2010

வைகை 2-வது கூட்டுக் குடிநீர் விநியோகப் பணிகள்: மதுரையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு

மதுரை, ஜன. 28: மதுரையில் வைகை 2}வது கூட்டுக் குடிநீர் விநியோகப் பணிகளை, செல்லூர் பகுதியில் நகராட்சி நிர்வாக இயக்குநர் பி. செந்தில்குமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

முன்னதாக, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரியை அவர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். குறிப்பாக, காவேரி குடிநீர்த் திட்டப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், ஆனையூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் நலத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர், ஆனையூர் பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், திருமங்கலம் நகராட்சியில் பழுதடைந்துள்ள சாலைகளையும் அவர் பார்வையிட்டு, சாலைகளை செப்பனிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருப்பரங்குன்றம் பேரூராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் புதிய அலுவலகக் கட்டடப் பணிகளையும் ஆய்வு செய்தார்.

தொடரந்து, மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தில் 2}வது வைகை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகப் பணிகளையும் நிர்வாக இயக்குநர் ஆய்வு செய்து, விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

பொதுமக்கள் புகார்: அப்போது, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பகுதி பொதுமக்களிடம் விசாரித்தபோது, குடிநீர் அளவு மிகவும் குறைவாக வருவதாகப் புகார் தெரிவித்தனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் அவர் கேட்டபோது, ரேஸ்கோர்ஸ் பகுதி குடிநீர் தொட்டியிலிருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இப்பகுதி கடைசியாக இருப்பதால் குடிநீர் அளவு குறைகிறது.

எனவே, பீபீகுளம் குடிநீர் மெயின் பைப்புடன் மீனாம்பாள்புரம் பகுதிக்கு பைப் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி அதிகாரிகளுக்கு இயக்குநர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் எஸ். செபாஸ்டின், தலைமைப் பொறியாளர் ரகுநாதன், துணை மேயர் பி.எம். மன்னன், உதவி கமிஷனர் (வருவாய்) ரா. பாஸ்கரன், எம்.எல்.ஏ. மூர்த்தி உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.