Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஓகேனக்கல் குடிநீர் திட்டச் செலவு அதிகரிப்புக்கு ஒப்புதல்: 1978 கோடி ரூபாய் என நிர்ணயித்தது தமிழக அரசு

Print PDF

தினமலர் 02.02.2010

ஓகேனக்கல் குடிநீர் திட்டச் செலவு அதிகரிப்புக்கு ஒப்புதல்: 1978 கோடி ரூபாய் என நிர்ணயித்தது தமிழக அரசு

 

Front page news and headlines today

சென்னை : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான செலவு 1,334 கோடியில் இருந்து 1,928 கோடியாக உயர்த்தப்பட்டு, அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள மூன்று நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 6,755 கிராமப்புற குடியிருப்புகள், 18 ஊராட்சி ஒன்றியங்களில், தண்ணீரில் உள்ள புளோரோசிஸ் தன்மையை போக்கி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இரண்டு கட்டங்களாக 1,334 கோடி ரூபாயில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்ட இத்திட்டத்துக்கு, 785 கோடியே 50 லட்சம் ரூபாயை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு வங்கியும், 173 கோடியே 70 லட்சம் ரூபாயை, குறைந்தபட்ச தேவை நிதியில் இருந்தும் பெறுவதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. மீதத் தொகையை, தமிழக அரசின் மானியத்தில் இருந்து செலவிட முடிவு செய்யப்பட்டது.இத்திட்டத்துக்காக முதல்கட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.இத்திட்டம், ஐந்து தொகுப்புகளாக செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால், திட்டத்துக்கான செலவு மதிப்பீடு 1,334 கோடியில் இருந்து 1,928 கோடியாக தற்போது உயர்ந்துள்ளது.மேடு பள்ளங்கள் போன்ற வேறுபாடுகளால், திட்டத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டு, அதற்கேற்ற பைப்புகள் வாங்க வேண்டி உள்ளது.

கிராமங்களின் கடைசிப் பகுதிக்கும் குடிநீர் கிடைக்க வசதியாக, தண்ணீர் தேக்குவதற்கு போதிய வசதிகள் செய்ய வேண்டியுள்ளது. கூடுதல் திறன் கொண்ட பம்பு செட்டுகள் வாங்குதல், உயரழுத்த மின் கருவிகள் வாங்குதல், கூடுதலாக ஒரு பூஸ்டர் நிலையம் அமைத்தல் போன்ற காரணங்களால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.இது தவிர, இந்திய ரூபாய்க்கும், ஜப்பான் யென் மதிப்புக்கும் இடையேயான மதிப்பின் வித்தியாசம் அதிகரித்தது, இந்த ஆண்டுக்குரிய விலைப் பட்டியலில் ஏற்பட்டுள்ள வித்தியாசம் போன்றவற்றால் இந்த திட்டத்துக்கான மதிப்பு உயர்ந்துள்ளது.

எனவே, திட்டத்துக்கான மதிப்பீட்டை 1,928 கோடியே 80 லட்சமாக உயர்த்தி, தமிழக அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. இதில், முதல்கட்டப் பணிக்கு, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு வங்கி 1,117 கோடியே 26 லட்சமும், இரண்டாம் கட்டத்துக்கு 468 கோடியே 34 லட்சமும் கடன் வழங்குகிறது. குறைந்தபட்ச தேவைகள் திட்ட நிதியில் இருந்து, முதல் கட்டத்துக்கு 220 கோடியே 7 லட்சமும், இரண்டாம் கட்டத்துக்கு 87 கோடியே 41 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்படுகிறது.உள்ளாட்சி அமைப்புகளின் பங்காக, முதல் கட்டப் பணிகளுக்கு 25 கோடியே 57 லட்சமும், இரண்டாம் கட்டத்துக்கு 10 கோடியே 15 லட்சம் ரூபாயும் அளிக்கப்படுகிறது.

இதுதவிர, திட்டத்தை செயல்படுத்தும் போது, அதன் பராமரிப்புச் செலவாக ஆண்டுக்கு 51 கோடியே 65 லட்சம் ரூபாய் ஆகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, இந்த செலவு 63 கோடியே 67 லட்சமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஐந்து ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை பராமரிக்க 318 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. இதற்கும் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதை ஈடுகட்ட, குடிநீர் கட்டணமாக நகர்ப்புறங்களுக்கு கிலோ லிட்டருக்கு 7.88 ரூபாயும், கிராமப்புறங்களில் 5.25 ரூபாயும், வணிக பயன்பாட்டுக்கு கிலோ லிட்டருக்கு 105 ரூபாயும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான களப் பணியை வரும் மார்ச் மாதம் துவக்கி, 2012 டிசம்பருக்குள் திட்டத்தை முடிக்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Tuesday, 02 February 2010 06:09