Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கருமத்தம்பட்டி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு '2வது திட்டம்' மார்ச்சில் துவக்க முடிவு

Print PDF

தினமலர் 05.02.2010

கருமத்தம்பட்டி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு '2வது திட்டம்' மார்ச்சில் துவக்க முடிவு

சோமனூர் : கருமத்தம்பட்டி பேரூராட்சி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இரண்டாவது குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிததாக எட்டு இடங்களில் மேல்நிலைத் தொட்டிகளை கட்ட, பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கருமத்தம்பட்டி பேரூராட்சியில் இரண்டாவது குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்படவுள்ளன. இதற்கான, மண் பரிசோதனைக்கு, மாதிரி சேகரிக்கப்பட்டது. சோமனூர் மற்றும் கருமத்தம்பட்டியை உள்ளடக்கிய கருமத்தம்பட்டி பேரூராட்சியில், பில்லூர் - அத்திக்கடவு திட்டத்தில் குடிநீர் சப்ளை நடக்கிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் குடிநீரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இரண்டாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, திட்ட பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இது குறித்து, கருமத்தம்பட்டி பேரூராட்சித் தலைவர் மகாலிங்கம் கூறிய தாவது:

பேரூராட்சி பகுதியில் தினமும் 12 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், குடிநீர் பற்றாக்குறையால் ஒன்பது முதல் 10 லட்சம் லிட்டர் மட்டுமே குடிநீர் சப்ளை நடக்கிறது. குடிநீர் தேவையை கருதியும், பற்றாக்குறையை சமாளிக்கவும் மேலும் 10 லட்சம் லிட்டர் குடிநீர் பெறும் வகையில் இரண்டாவது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, எட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன. சோமனூர் நொய்யல் ஆற்றுப்பாலம் அருகேயுள்ள 13 சென்ட் நிலத்தை சென்னிமலை, பாலசுப்பிரமணியம், அருணாசலம், சென்னியப்பன் ஆகியோர் பேரூராட்சிக்கு தானமாக வழங்கியுள்ளனர். இந்த இடத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி கட்டப்படுகிறது.

அதே போன்று, கிருஷ்ணாபுரத்திலும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியும், ராயர்பாளையம் முதல் மற்றும் 18 வது வார்டில் இந்திரா காலனி, செகுடந்தாளி புதூர் பகுதிகளில் தலா 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகளும், ஆத்துப்பாளையம், விராலிக்காடு பகுதிகளில் தலா 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலைத் தொட்டிகளும் கட்டப்படவுள்ளன. இதற்காக, மண் பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. கோவையில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு முடிவு கிடைத்தவுடன் தொட்டிகள் கட்டும் பணி துவங்கும். இத்திட்ட பணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாத இறுதிக்குள் துவங்கும். இவ்வாறு, மகாலிங்கம் தெரிவித்தார்.

Last Updated on Friday, 05 February 2010 06:32