Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆண்டிபட்டிக்கு கூடுதல் குடிநீர் திட்டம் தேவை: பழைய திட்டங்களால் வீணாகும் குடிநீர்

Print PDF

தினமலர் 08.02.2010

ஆண்டிபட்டிக்கு கூடுதல் குடிநீர் திட்டம் தேவை: பழைய திட்டங்களால் வீணாகும் குடிநீர்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பேரூராட்சியின் கூடுதல் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய திட்டம் கொண்டு வர நடவடிக்கை வேண்டும். ஆண்டிபட்டி பேரூராட்சியில் 30 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் பல்வேறு வேலை நிமித்தமாக தினமும் ஆண்டிபட்டி வந்து செல்கின்றனர்.

சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி மற்றும் விரிவாக்க பகுதிகளில் ஏழு குடிநீர் மேல்நிலைத்தொட்டிகள் உள்ளன. 1974 ல் துவக்கப்பட்ட குன்னூர்-அரப்படித்தேவன்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 12 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கூடுதல் குடிநீர் தேவைக்கு சேடபட்டி-ஆண்டிபட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 12 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. குன்னூர் ஆற்றில் நீர் வரத்து குறைந்த காலங்களில் கிணறுகளில் நீர் சுரப்பு குறைந்து போகும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு போடப் பட்ட குன்னூர்-அரப்படித்தேவன்பட்டி திட்டத்தில் குடிநீர் உறை கிணறு, பைப் லைன்கள் அடிக்கடி சேதம் அடைகிறது. ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதிக்கு வரும் குடிநீர் வழியோர கிராமங்களில் திருடப்படுவதால் முழுமையாக வந்து சேர்வதில்லை. இதனால் கோடையில் கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆற்றில் நீர் வரத்து அதிகம் உள்ள மழை காலங்களில் சுத்திகரிக்கப்படாத குடிநீர் வினியோகத்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

பேரூராட்சி குடிநீர் தேவையின் நிரந்தரமான தீர்வுக்கு வைகை அணை "பிக்கப்' டேமில் இருந்து புதிய திட்டம் துவக்கப்பட வேண்டும் அல்லது ஏற்கனவே உள்ள சேடபட்டி-ஆண்டிபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் கூடுதலாக பம்ப் செய்யப்பட்டு ஆண்டிபட்டி பகுதிக்கு வினியோகிக்க வேண்டும். பேரூராட்சி தலைவர் ராமசாமி, நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் கூறுகையில், "பேரூராட்சி பகுதியின் குடிநீர் தேவைக்கு திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள் ளது. திட்டம் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Last Updated on Monday, 08 February 2010 05:40