Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த கடையநல்லூர் நகர்மன்றத்தில் தீர்மானம்

Print PDF

தினமணி 09.02.2010

புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த கடையநல்லூர் நகர்மன்றத்தில் தீர்மானம்

கடையநல்லூர், பிப். 8: கடையநல்லூர் நகராட்சியில் ஏற்கனவே உள்ள குடிநீர் கட்டணத்தை உயர்த்தாமல் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடையநல்லூர் நகர்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை மாலை தலைவர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் காளிராஜ், ஆணையர் அப்துல் லத்தீப், பொறியாளர் அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நகராட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 21.41 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த குடிநீர் முன்வைப்புத் தொகை மற்றும் குடிநீர் கட்டணத்தை உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம் மற்றும் டி.என்.யு.டி.எப் தெரிவித்துள்ளது.

எனவே தற்போது குடியிருப்பு உபயோகங்களுக்கான (வீடுகள்) குடிநீர் இணைப்புக்களுக்கு பெறப்பட்டு வரும் முன்வைப்புத் தொகை 4000-6000 ஆக உயர்த்தவும், மேலும் தற்போது மாதம் ஒன்றுக்கு வசூலிக்கப்பட்டு வரும் குடிநீர் கட்டணம் ரூ. 50 100 ஆக உயர்த்தவும், குடியிருப்பு இல்லாத உபயோகங்களுக்கான குடிநீர் இணைப்புக்களுக்கான முன்வைப்புத் தொகையை ரூ. 8000-லிருந்து. 10,000 ஆக உயர்த்தவும், தற்பொழுது மாதம் ஒன்றுக்கு வசூலிக்கப்பட்டு வரும் குடிநீர் கட்டணம் 100 , 200 ஆக உயர்த்தவும் (அல்லது 1000 லிட்டருக்கு ரூ. 20) மன்ற அனுமதி கோரி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இத்தீர்மானத்திற்கு நகர்மன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் மன்றத்தில் கடும் அமளி நிலவியது.

தீர்மானத்தை ரத்துசெய்ய வேண்டும் என உறுப்பினர்கள் சங்கரநாராயணன், ராமநாதன், கருப்பையா, சரஸ்வதி மற்றும் முஸ்லீம் லீக் நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இதன் சாதக அம்சங்களை நகர்மன்றத் தலைவர் மற்றும் ஆணையர் எடுத்துக் கூறினர்.

இதையடுத்து தீர்மானத்தை ரத்துசெய்யும் முடிவை உறுப்பினர்கள் கைவிட்டனர். பின்னர் ஏற்கெனவே உள்ள குடிநீர் கட்டணத்தை உயர்த்தாமல் புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பிரச்னை காரணமாக மன்றத்தில் கடும் சலசலப்பு நிலவியது.

கடையநல்லூர் நகராட்சியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முறையற்ற வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

வரி மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் என்ற முறையில் நான் பல முறை இது குறித்துப் பேசியும், மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

எனவே மக்கள் பணி செய்ய முடியாத இந்த வரி மேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்கிறேன் என, நகர்மன்ற உறுப்பினர் சங்கரநாராயணன் அதற்கான கடிதத்தையும் நகர்மன்றத் தலைவரிடம் கொடுத்தார்.

ராஜிநாமா செய்யப்போகிறேன்: நகர்மன்றத் தலைவர்

இந்நிலையில், நகர்மன்றக் கூட்டத்தில் புதிய குடிநீர்த் திட்டம் தொடர்பான விவாதத்தில் பேசிய உறுப்பினர்கள் திட்டத்தை எதிர்த்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

தலைவர் பல முறை மைக்கில் பேசியும் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை. திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து உறுப்பினர்கள் குரல் கொடுத்து வந்தனர்.

திட்டத்தை ரத்து செய்ய வேண்டாம், அதற்கு பதில் குடிநீர் கட்டணத்தை உயர்த்தாமல் புதிய திட்டத்தை கொண்டு வர கோரி தீர்மானம் நிறைவேற்றுவோம் என தலைவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஆனால் உறுப்பினர்கள் தொடர்நது பேசிக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து பேசிய தலைவர் இப்ராஹிம் தான் கூறுவதை யாரும் கவனிக்கவில்லை. எனக்கு மரியாதை இல்லை. எனவே நான் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டால் உங்களைப் போல் உறுப்பினராக மாறி சப்தம் போட்டு பேச முடியும். எனவே நான் ராஜிநாமா செய்கிறேன் என வேதனையுடன் தெரிவித்தார். இதனையடுத்து உறுப்பினர்கள் அமளியைக் குறைத்து தலைவரின் பேச்சை கவனித்தனர்.

Last Updated on Tuesday, 09 February 2010 07:16