Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காவிரி குடிநீர் வினியோக அறிவிப்புக்கு இறுதிகெடு: மார்ச் முதல் தடையின்றி கிடைக்குமாம்

Print PDF

தினமலர் 09.02.2010

காவிரி குடிநீர் வினியோக அறிவிப்புக்கு இறுதிகெடு: மார்ச் முதல் தடையின்றி கிடைக்குமாம்

ராமநாதபுரம்: "மாவட்டம் முழுவதும் காவிரி குடிநீர் வினியோகம் மார்ச் முதல் தடையின்றி கிடைக்கும்,' என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறையாவது அதிகாரிகள் தங்கள் உறுதிமொழியை நிறைவேற்றுவார்களா, என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வறட்சியின் பிடியிலிருந்த ராமநாதபுரத்தின் தாகம் தீர்க்க காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. 616கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்ட இத்திட்டம், ராமநாதபுரம் மட்டுமின்றி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களும் பயன்பெறும் வகையில் விரிவாக்கப்பட்டது. இத்திட்டம் மூலம் மாவட்டத்தை சேர்ந்த 2332 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. துணை முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், ராமநாதபுரத்தில் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் ,""அடுத்த 30 நாட்களில் மாவட்டம் முழுவதும் காவிரி நீர் வினியோகம் பூர்த்தியடையும்,'' என , தெரிவித்தார். அதன் பின் நடந்ததோ, சோகத்திலும் சோகம் தான். தலைநகர் ராமநாதபுரத்திலேயே காவிரி நீர்வினியோகம் படுமாந்தமாக நடந்து வருகிறது. அப்படியிருக்கும் போது, ஊரக பகுதிகளின் நிலையை சொல்லித்தெரியவேண்டியதில்லை. பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், கீழக்கரை, ராமேஸ்வரம் என எங்கு பார்த்தாலும் காவிரி நீர் வீணாகும் காட்சிகள் ஏராளம்.

இங்கு இப்படியென்றால், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் காவிரி எப்போது வரும் என்பதே தெரியவில்லை. பரமக்குடி-ராமநாதபுரம் இடையே காவிரி குடிநீர் இணைப்பு குழாய் சென்ற போதிலும், இடையில் உள்ள சத்திக்குடிக்கு குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. இது போல் இணைப்பு பெறாத பகுதிகளே மாவட்டத்தில் நிறைய உள்ளன. கோடி கணக்கில் பணத்தை செலவு செய்தும், பயன் என்று பார்த்தால், அதில் ஒரு பங்கு கூட இல்லை. நிலை இப்படியிருக்கும் போது, ""மார்ச் ஒன்று முதல் மாவட்ட முழுவதும் காவிரி நீர் வினியோகம், தடையின்றி வழங்கப்படும்,'' என, கலெக்டர் ஹரிஹரன் அறிவித்துள்ளார். ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் கூறும்,இது போன்ற உறுதிமொழிகளால் எரிச்சலடைந்துள்ள மாவட்ட மக்கள், மாவட்ட நிர்வாகத்தின் இந்த உறுதிமொழிக்கு இறுதிகெடு அளித்துள்ளனர். "எது எப்படியோ விடிவு பிறந்தால் சரிதான்,' என, புலம்பும் பொதுமக்கள் தரப்பின் ஒரு பிரிவினரும் எதிர்பார்ப்பில் காவிரி நீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உத்தரவு உபயோகம் தருமா?: தடையில்லாத காவிரி நீர் வினியோக அறிவிப்பு குறித்து கலெக்டர் ஹரிஹரன் கூறுகையில்,"" மாவட்டத்தில் காவிரி நீர் வினியோக சோதனை பணிகள், இணைப்பு குழாய் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தேன். எமனேஸ்வரம், பார்த்திபனூர், கமுதி , கடலாடி பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டுவதற்கான உரிய கருத்துரு தயாரிக்க உத்தரவிட்டுள்ளேன். மாவட்டத்தில் காவிரி நீர் தொடர்பான பணிகள் அனைத் தையும் நிறைவு செய்து, மார்ச் ஒன்று முதல் அனைத்து பகுதிக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Last Updated on Tuesday, 09 February 2010 09:07