Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

'சென்னைக்கு டிசம்பர் வரை குடிநீர் தட்டுப்பாடு இல்லை'

Print PDF

தினமலர் 12.02.2010

'சென்னைக்கு டிசம்பர் வரை குடிநீர் தட்டுப்பாடு இல்லை'

சென்னை : ""கிருஷ்ணா நீர் வரத்து உள்ளதாலும், ஏரிகளில் போதுமான அளவுக்கு நீர் இருப்பதாலும், டிசம்பர் வரை சென்னையில் குடிநீர் பிரச்னை இருக்காது,'' என, சென்னை குடிநீர் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.சென்னையை சுற்றிலும் உள்ள பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மழை மூலம் கிடைக்கும் நீரை தேக்கி, ஆண்டு முழுவதும், சென்னை குடிநீர் வாரியம் மக்களுக்கு நீரை வழங்கி வருகிறது.இந்த நான்கு ஏரிகள் தவிர, வீராணம் ஏரியில் இருந்தும் குடிநீருக்காக குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபரில் துவங்க வேண்டிய மழை, நவம்பர் மத்தியில் துவங்கி சரியான அளவில் பெய்யவில்லை.

இருந்தாலும், ஓரளவிற்கு ஏரிகள் நிரம்பின. இதனிடையில், ஆந்திர அரசு தர வேண்டிய கிருஷ்ணா நீரும் சென்னைக்கு வந்ததால், தற்போது ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.நேற்றைய நிலவரப்படி, நான்கு ஏரிகளையும் சேர்த்து 6,665 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 8,832 மில்லியன் கன அடிநீர் இருப்பு இருந்தது. கடந்தாண்டை விட, 2,167 மில்லியன் கன அடிநீர் குறைவாகும்.கண்டலேறு அணையில் இருந்து, வினாடிக்கு 346 கன அடி கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஏரியில் இருந்து வினாடிக்கு, 316 கன அடிநீர் திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரால், புழல் ஏரி நிரம்பி வருகிறது.ஏரியில் நேற்றைய நிலவரப்படி, 2,413 மில்லியன் கன அடிநீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு, 220 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து வினாடிக்கு, 125 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. வீராணம் ஏரி நிரம்பி, தற்போது ஏரியில், 1,465 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது.ஏரியில் இருந்து பாசனத்திற் காக வினாடிக்கு, 200 கன அடிநீரும், குடிநீருக்காக வினாடிக்கு, 75 கன அடிநீரும் திறந்து விடப் படுகிறது.

ஏரி நீர் இருப்பு தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:சென்னை மக்களுக்கு ஒருவருக்கு தினசரி 105 லிட்டர் என்ற அளவில் நகர் முழுவதும் 600 முதல் 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந் ஒதது. ஏரிகளின் நீர் இருப்பை பாதுகாக்கவும், கோடைக் காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், தற்போது நீர் வினியோக அளவு 570 மில்லியன் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் சென்னைக்கு வர வேண்டும். 2008ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2009 ஏப்ரல் வரை 6.8 டி.எம்.சி., நீர் வந்துள்ளது. அடுத்ததாக 2009 செப்டம்பர் முதல் இதுவரை 4.3 டி.எம்.சி., நீர் வந்துள்ளது.இடையில், தெலுங்கானா பிரச்னை காரணமாக நீர் நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடர்ந்து தற்போது வந்து கொண்டிருக்கிறது.வீராணம் ஏரியில் இருந்து தினசரி, 180 மில்லியன் லிட்டர் தண் ணீர் வந்து கொண்டிருக் கிறது. தற்போது உள்ள நீர் இருப்பை வைத்து வரும் டிசம்பர் வரை அதாவது அடுத்த மழைக்காலம் வரை சமாளிக்கலாம்.இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

Last Updated on Friday, 12 February 2010 06:41