Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவில்பட்டி 2-வது பைப் லைன் குடிநீர்த் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேறும்

Print PDF

தினமணி 12.02.2010

கோவில்பட்டி 2-வது பைப் லைன் குடிநீர்த் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேறும்

கோவில்பட்டி, பிப். 11: இந்த ஆண்டு இறுதிக்குள் கோவில்பட்டி நகர மக்களின் முக்கியத் தேவையான குடிநீருக்கான 2-வது பைப் லைன் திட்டம் நிறைவேறும் என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியதாக கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் (அதிமுக) ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து, கோவில்பட்டி எம்.எல்.. அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

கோவில்பட்டி தொகுதி பின்தங்கிய நிலையில் உள்ளது. தொழில் வளர்ச்சி, தண்ணீர் பிரச்னை மற்றும் சாலை வசதி உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் குறைவாக உள்ளது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், முதல்வரை சந்தித்து குறைகளை எடுத்துக் கூறுவதற்கு முன்னர், மத்திய அமைச்சர் அழகிரியை மதுரையில் அண்மையில் சந்தித்து மனு அளித்தேன்.

அந்த மனுவில் கோவில்பட்டி பகுதிக்கு தொழிற்சாலை வர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். இதை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் அழகிரி, தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைவதற்கு நடவடிக்கை எடுத்துவரும் இந்த சூழ்நிலையில், தங்கள் கோரிக்கைகளையும் முறையாக ஆய்வு செய்து குறைகளை நீக்குவேன் என்றார். மேலும், தொகுதி வளர்ச்சிப் பிரச்னை குறித்து முதல்வரிடம் கூறுமாறு அறிவுறுத்தினார்.

அதையடுத்து, முதல்வரை சந்தித்து கோவில்பட்டியில் நிலவும் குடிநீர் பிரச்னை, சாலை வசதி உள்ளிட்ட குறைகளை கூறினேன். தென் மாவட்டத்தில் கோவில்பட்டி பின்தங்கிய நிலையில் உள்ளது. குறிப்பாக, தீப்பெட்டித் தொழில் நசிவடைந்து வருகிறது. பஞ்சாலைத் தொழிலிலும் முன்னேற்றம் இல்லை. விவசாயிகளுக்கு மழைக் காலங்களை தவிர, மற்ற நேரங்களில் பணி கிடைக்க வேண்டும் என்றேன்.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி, கோவில்பட்டியில் தண்ணீர் பிரச்னை தீர்வதற்கு கலைமணி காசியின் பெரும் முயற்சியினால், 2 ஆண்டில் முடிவடைய வேண்டிய பணி ஓராண்டில் நிறைவு பெற்று, சுமார் 34 ஆண்டுகளாக குடிநீர் வழங்கி வருகிறோம்.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள மக்கள் தொகை மற்றும் பைப் லைனின் முதிர்வு காலத்தினால், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு கிடைக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

மேலும், உள்ளாட்சித் துறையின் கோரிக்கைகளை துணை முதல்வரிடம் எடுத்துரைக்குமாறு கூறியதையடுத்து, துணை முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்தேன். அப்போது கோவில்பட்டி மக்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்றேன். உடனே அதிகாரிகளை அழைத்து, அந்த திட்டம் குறித்து கேட்டறிந்தார்.

அதற்கு, அதிகாரிகள், மத்திய அரசிடம் இதற்கான திட்டம் குறித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றும், அதில் சிறு தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள், துணை முதல்வரிடம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, இந்த ஆண்டு பட்ஜெட்டில் இதுகுறித்து அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், கோவில்பட்டியிலுள்ள ஓடைகள் தூர்வாரப்படாமல், மழைக் காலங்களில் ஓடைத் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து, சாலைகளை சேதப்படுத்துவது குறித்தும் கூறினேன் என்றார்.

முன்னதாக கோவில்பட்டி நகர திமுக செயலர் ராமர், ஒன்றியச் செயலர் பீக்கிலிபட்டி வீ. முருகேசன், மாவட்டப் பொருளாளர் ராஜேந்திரன், ஒன்றியப் பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாறன், ராஜாராம், ஊராட்சித் தலைவர்கள் பச்சமால் (இனாம்மணியாச்சி), முருகன் (பாண்டவர்மங்கலம்), மாரீஸ்வரன் (மூப்பன்பட்டி) மற்றும் நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள், எம்.எல்.. ராதாகிருஷ்ணனை சந்தித்து சால்வை அணிவித்தனர்

Last Updated on Friday, 12 February 2010 11:48