Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொளத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு விஸ்வரூபம்: நீர் உறிஞ்சும் மோட்டாரை அகற்ற 15 நாள் கெடு

Print PDF

தினமலர் 18.02.2010

கொளத்தூரில் குடிநீர் தட்டுப்பாடு விஸ்வரூபம்: நீர் உறிஞ்சும் மோட்டாரை அகற்ற 15 நாள் கெடு

மேட்டூர்: கொளத்தூர் டவுன்பஞ்., குடிநீர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்துள்ளதை தொடர்ந்து, டவுன்பஞ்., செயல் அலுவலர், தலைவர், பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேட்டூர் தாலுகா, கொளத்தூர் டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டு உள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி மொத்தம் 10 ஆயிரத்து 250 பேர் வசிக்கின்றனர். தற்போது டவுன் பஞ்., 250 பொது குடிநீர் இணைப்புகள், 2 ஆயிரத்து 25 வீட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளது. காவிரியில் இருந்து தினமும் எட்டு லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு கொளத்தூருக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தவிர கொளத்தூர் இரட்டை கிணற்றில் இருந்து தினமும் 5 லட்சம் லிட்டருக்கு மேல் உப்பு நீரும் விநியோகம் செய்யப்படும். கொளத்தூர் டவுன்பஞ்., வீதிகள் மேடு, பள்ளமாக இருப்பதால் குடிநீர் 44 கேட் வால்வுகள் அமைத்து ஒவ்வொரு பகுதிக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 500க்கும் மேற்பட்ட வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் மின்மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சு எடுத்து விடுகின்றனர். அதனால், கொளத்தூரில் தற்போது வாரம் ஒருநாள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கோடை துவங்கியுள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு கொளத்தூர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, நேற்று மாலை குடிநீர் விநியோகம் குறித்த ஆலோசனை கூட்டம் கொளத்தூர் சமுதாய கூடத்தில் நடந்தது. கூட்டத்தில் டவுன்பஞ்., தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மாதையன், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து காண்டனர். ஆலோசனை கூட்டத்தின் முடிவில், காவிரி குடிநீர் திட்டத்தில் இருந்து தினமும் கூடுதலாக 2 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்ய குடிநீர்வடிகால் வாரியத்திடம் கோரிக்கை வைப்பது, ஹார்ஸ் பவர் அதிகமுள்ள மோட்டார்களை வைத்து கூடுதல் குடிநீர் விநியோகம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.


வீட்டு உரிமையாளர் பலர் தங்கள் வீடுகளில் குடிநீரை உறிஞ்சுவதற்காக வைத்துள்ள மின்மோட்டார்களை இருவாரத்தில் அகற்ற வேண்டும். இல்லையேல் டவுன்பஞ்., மூலம் மின்மோட்டார்கள் அனைத்தையும் பொதுமக்கள் ஆதரவோடு பறிமுதல் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

Last Updated on Thursday, 18 February 2010 07:09