Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மே 27-க்குள் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: வாரியம் முடிவு

Print PDF

தினமணி 03.03.2010

மே 27-க்குள் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு: வாரியம் முடிவு

பெங்களூர், மார்ச் 2: மழைநீர் சேகரிப்பை கட்டாயப்படுத்தும் நோக்கில் வரும் மே 27-ம் தேதிக்குள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதிகள் ஏற்படுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.

காவிரி ஆற்றுநீர், திப்பகொண்டனஹள்ளி ஏரி, அர்காவதி ஏரி போன்ற நீர் ஆதாரங்கள் மூலம் பெங்களூரின் 60 சதவிகித மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 40 சதவிகித மக்கள், குடிநீருக்காக நிலத்தடி நீரையே நம்பியுள்ளனர். இப்புள்ளி விவரங்கள் பெங்களூரைச் சேர்ந்த சென்டர் ஃபார் சிம்பையாசிஸ் ஆஃப் டெக்னாலஜி, என்வரான்டெண்ட் மேனேஜ்மெண்ட் (எஸ்.டி..எம்.) என்ற ஆராய்ச்சி அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளன.

நகரில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்துகொண்டே செல்கிறது. மழைநீர் நிலத்தடியில் செல்லாததுதான் நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கு ஒரு காரணமென கூறப்படுகிறது.

மழைக்காலங்களில் மழைநீரை வீணாக்காமல் முறையாக சேகரித்து நிலத்துக்கு அடியில் செல்லும் வகையில் செய்தால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் வீடுகளில் மழைநீரை போதிய அளவு சேகரித்து வைத்தால் குடிநீர்ப் பற்றாக்குறை காலங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனைக் கருத்தில் கொண்டு மழைநீர் சேகரிப்பு கட்டாய சட்டத்தை கடந்த ஆண்டில் அரசு கட்டாயமாக்கியது.

இருப்பினும் பல கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே இவ்வசதியை ஏற்படுத்த கடும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.

இதுகுறித்து பெங்களூர் குடிநீர் விநியோக மற்றும் வடிகால் வாரிய செய்தித் தொடர்பாளர் ஏ.என். பிரஹலாத் ராவ் நமது நிருபரிடம் கூறியது: மழைநீரை கட்டாயம் சேகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்காக பெங்களூர் வாட்டர் சப்ளை மற்றும் சேவேஜ் 1964-ம் ஆண்டு சட்டத்தில் 72ஏ சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்டு 2009-ம் ஆண்டு சட்டத் திருத்தமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவின்கீழ் நகரில் வசிப்போர் தங்களது கட்டடங்களின் மீது பெய்யும் மழையை முறையாக சின்டெக்ஸ் தொட்டிகளில் சேகரிக்க வேண்டும். நிலத்தில் தொட்டி கட்டி அதில், சேகரிக்கப்பட்ட மழைநீர் வந்து விழும் வண்ணம் குழாய்கள் பதிக்க வேண்டும்.

2400 சதுர அடி பரப்பளவு அல்லது அதற்கு மேல் உள்ள பழைய கட்டடங்களிலும் 1200 சதுர அடி பரப்பளவில் புதிதாக கட்டப்படும் வீடுகளிலும் குறிப்பிட்ட விதிகளின்படி மழைநீர் சேகரிப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நகரில் சுமார் 60 ஆயிரம் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்படவில்லை என்று கண்டறிந்துள்ளோம்.

எனவே, சட்ட விதிகளின்படி வரும் மே 27-ம் தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு வசதியை பழைய, புதிய வீடு, கட்டடங்களின் உரிமையாளர் ஏற்படுத்த வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யவில்லை என்றால் கட்டடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார் அவர்.

Last Updated on Wednesday, 03 March 2010 09:50