Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூரில் போக்குவரத்து, குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

Print PDF

தினமணி 06.03.2010

பெங்களூரில் போக்குவரத்து, குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

பெங்களூர், மார்ச் 5: பெங்களூரில் போக்குவரத்து மற்றும் குடிநீர், வடிகால் வசதிகளை மேம்படுத்த ரூ.18,872 கோடி ஒதுக்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்வர் எடியூரப்பா அறிவித்தார்.

நகரம் முழுவதும் மெட்ரோ ரயில், மோனோ ரயில் மற்றும் நல்ல சாலைகள் மூலம் போக்குவரத்தை மேம்படுத்தவும், குடிநீர் சப்ளை மற்றும் வடிகால் வசதிகளை மேம்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.18,872 கோடி செலவிடப்படும். பெங்களூரில் இருந்து உள்ளூர், புறநகர் ரயில் சேவைகளைத் துவக்க தேவையான மொத்த நிதியில் 50 சதவீதத்தை ரயில்வே துறைக்கு மாநில அரசு வழங்கும்.

பெங்களூர் அபிவிருத்தி ஆணையம் மூலம் நகரில் பல அடுக்கு மாடிகொண்ட வாகன நிறுத்தும் மையங்களை கட்டவும், 10 போக்குவரத்து வழித்தடங்களை மேம்படுத்தவும் மொத்தம் ரூ.1000 கோடி செலவிடப்படும். நகரில் உள்ள 25 ஏரிகளை மேம்படுத்த ரூ.200 கோடி செலவிடப்படும். நகர சாலைகள், நடைபாதைகளை மேம்படுத்தவும், மேம்பாலங்கள், சுரங்கப் பாலங்கள் கட்ட ரூ.3 ஆயிரம் கோடி செலவிடப்படும்.

மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் வடிகால் வசதிகளை செய்ய ரூ.425 கோடி செலவிடப்படும். நகரின் பழைய பகுதிகளில் பழுதான குடிநீர், வடிகால் குழாய்களை மாற்ற ரூ.100 கோடி செலவிடப்படும்.

நகர்ப்புற வளர்ச்சிக்கு முக்கியமந்திரி நகரோதனா யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.600 கோடி ஒதுக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் 7 மாநகராட்சிகள், 44 நகராட்சிக் கவுன்சில்கள், 94 டவுன் நகராட்சி கவுன்சில்கள் மற்றும் 68 டவுன் பஞ்சாயத்துக்கள் வளர்ச்சிகளுக்கு குறிப்பிட்ட நிதி செலவிடப்படும்.

மாநிலத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களுக்கு போதுமான குடிநீர் வழங்க ரூ.304 கோடி செலவிடப்படும். 120 டவுன்களில் குடிநீர் விநியோக திட்டம் நீட்டிக்கப்படும். குல்பர்கா, ஹூப்ளி, பெல்காம் நகரங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் 24 மணி நேர குடிநீர் விநியோக திட்டம் மேலும் 16 நகரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

ஹூப்ளி-தார்வாட் நகரங்களுக்கு இடையே நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.50 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. யாதகிரி புதிய மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.25 கோடியும், 75-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் உடுப்பி நகராட்சிக் கவுன்சிலுக்கு ரூ.25 கோடியும், விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆய்வு மையம் துவங்க ரூ.5 கோடியும் ஒதுக்கப்படும்.

Last Updated on Saturday, 06 March 2010 10:13