Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இரண்டு ஆண்டுக்குப்பின் நிரம்புது சிறுவாணி!

Print PDF

தினமணி 18.07.2009

இரண்டு ஆண்டுக்குப்பின் நிரம்புது சிறுவாணி!

கோவை, ஜூலை 17: இரண்டு ஆண்டுகளுக்குப்பின் சிறுவாணி அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

இதனால் நடப்பு ஆண்டில் குடிநீர் தட்டுப்பாடு வராது என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாக இருப்பது சிறுவாணி அணை. மொத்தம் 23.5 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த அணைக்கு, தென்மேற்குப் பருவமழைதான் பிரதான நீர் ஆதாரம்.

ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்குப் பருவமழை காலத்தில், அணை முழுகொள்ளளவை எட்டினால்தான் அந்த ஆண்டின் கோடையை சமாளிக்க முடியும்.

பருவமழை தீவிரம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கேரள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான சிறுவாணி மலை, பாம்பாறு, பட்டியாறு, முக்கிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சிறுவாணி அணையிலும் கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 876.10 மீட்டராக உயர்ந்துள்ளது. அணையின் உச்ச நீர்மட்டம் 878.5 மீ (கடல் மட்டத்தில் இருந்து).

இதேபோல கனமழை பெய்தால் இரு தினங்களில் அணை நிரம்பிவிடும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு முன்பு 8.7.2007-ல் அணை நிரம்பியது. 13.11.2007 வரை அணை தொடர்ந்து நிரம்பியிருந்தது.

இரு ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடுகடந்த இரு ஆண்டுகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவழைகள் பொய்த்துவிட்டதால் சிறுவாணி அணை நிரம்பவில்லை.

இதனால் கோவை, குனியமுத்தூர், குறிச்சி உள்ளிட்ட இடங்களில் குடிநீர்த்தட்டுப்பாடு அதிகரித்தது.

சிறுவாணி அணையில் இருந்து தினமும் 86 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு, 67 மில்லியன் லிட்டர் கோவை மாநகராட்சிக்கும், 19 மில்லியன் லிட்டர் குறிச்சி, குனியமுத்தூர் போன்ற புறநகர் பகுதிகளுக்கும் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால், அணையில் நீர்மட்டம் குறைந்ததால் கடந்த இரு மாதங்களாக 65 மில்லியன் லிட்டர் மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 50 மில்லியன் லிட்டர் கோவை மாநகராட்சிக்கும், 15 மில்லியன் லிட்டர் புறநகர் பகுதிகளுக்கும் வழங்கப்படுகிறது.

புதிய இணைப்பு நிறுத்தம் கோவையில் சுமார் 70,000 குடிநீர் இணைப்புகளுக்கும், குறிச்சியில் 13,000 இணைப்புகளுக்கும், குனியமுத்தூரில் 8,500 இணைப்புகளுக்கும் இக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக 6 மாதங்களாக குடிநீர் இணைப்பு வழங்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கூடுதலாக குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

"அணையில் நீர்மட்டம் குறைந்ததால் மாநகராட்சி பகுதியில் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இப்போது நீர்மட்டம் அதிகரித்து வருவதால் ஒருநாள்விட்டு ஒருநாள் குடிநீர் விநியோகம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கோடையில் குடிநீர்த் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை.

அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் இரு நாட்களுக்குள் அணை நிரம்பிவிடும் என எதிர்பார்க்கிறோம்' என்கிறார் கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம்.