Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னையை போக்க 13 ஆழ்துறை கிணறுகள்: குடியாத்தம் நகராட்சி நடவடிக்கை

Print PDF

தினமலர் 18.03.2010

குடிநீர் பிரச்னையை போக்க 13 ஆழ்துறை கிணறுகள்: குடியாத்தம் நகராட்சி நடவடிக்கை

குடியாத்தம்:குடியாத்தத்தில் குடிநீர் பிரச்னையைப் போக்க ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் 13 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட உள்ளது என்று நகராட்சி தலைவர் பாஸ்கர், கமிஷனர் சுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்தனர்.குடியாத்தம் நகரில் குடிநீர் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் 15 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது. மார்ச் மாதத்திலேயே இந்த நிலைமை என்றால் கோடைகாலத்தில் என்னவாகுமோ என்ற கவலை மக்களை இப்போதே வாட்டி வதைத்த வருகிறது.நகராட்சி தலைவர் பாஸ்கர், கமிஷனர் சுப்பிரமணியன், பொறியாளர் உமா மகேஸ்வரி, கவுன்சிலர்கள் தேவராஜ், மோகன், சைதைபாபு, மூர்த்தி, கருணா, ராமச்சந்திரன், சத்தியமூர்த்தி ஆகியோர் நகரப்பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யும் போடிப்பேட்டை, பசுமாத்தூர் ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர்.

பின்னர் நகராட்சி தலைவர், கமிஷனர் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:குடியாத்தம் நகரப்பகுதிகளுக்கு போடிப்பேட்டை மற்றும் பசுமாத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக பசுமாத்தூர் பாலாற்றில் 8 கிணறுகளும், 12 ஆழ்துளை கிணறுகளும் உள்ளன. இதில் 6 கிணறுகளும், 7ஆழ்துளை கிணறுகளும் முழுவதுமாக வற்றி விட்டன.போடிப்பேட்டை கவுண்டன்ய ஆற்றில் 2 கிணறுகளும், 9 ஆழ்துளை கிணறுகளும் உள்ளன. இதில் 2கிணறுகளும், 5 ஆழ்துளை கிணறுகளும் முழுவதுமாக வற்றி விட்டன.

குடியாத்தம் நகர மக்களுக்கு தினமும் 86 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் கிணறுகள் வறண்டு விட்டதால் பசுமாத்தூரில் இருந்து பெறப்படும் 16 லட்சம் லிட்டர், போடிப்பேட்டையில் இருந்து பெறப்படும் 40 ஆயிரம் லிட்டர், சந்தப்பேட்டையில் இருந்து பெறப்படும் 60 ஆயிரம் லிட்டர் என மொத்தம் 17 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டும்தான் சப்ளை செய்யமுடிகிறது.

நகரம் முழுவதும் 283 சிறு மின் விசை தொட்டிகள் மூலம் கிடைக்கும் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தண்ணீர் கிடைக்காத பகுதிகளுக்கு 8 லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.நிலவி வரும் குடிநீர் பஞ்சத்தை போக்க, நகராட்சி பொதுநிதியில் இருந்து 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பசுமாத்தூரில் 5 ஆழ்துளை கிணறுகளும், போடிப்பேட்டையில் 4ம், சந்தப்பேட்டையில் 2 ஆழ்துளை கிணறுகளும், செதுக்கரையில் 2 ஆழ்துளை கிணறுகளும் என மொத்தம் 13ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.

இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் பணி துவக்கப்படும்.கோடை கால குடிநீர் பிரச்னையை தீர்க்கும் பொருட்டு பொதுமக்கள், சிறுமின்விசை தொட்டிகளில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். 'பைப்' மூலம் வீட்டுத்தொட்டிக்கு ஏற்றக்கூடாது. மேலும் மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவதை தவிர்க்க வேண்டும்.குடிநீரை வீணாக்க வேண்டாம். பூதாகரமாக உருவெடுத்துள்ள தண்ணீர் பிரச்னையை போக்க பொதுமக்கள் ஒத்துழைப்புகொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Last Updated on Thursday, 18 March 2010 06:19