Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் ஜூனில் நிறைவு செய்ய அதிகாரிகள் முடிவு

Print PDF

தினமலர் 24.03.2010

திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் ஜூனில் நிறைவு செய்ய அதிகாரிகள் முடிவு

உடுமலை: 'உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள் மற்றும் நான்கு பேரூராட்சிகள் பயன் பெறும் புதிய திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்ட பணியை, வரும் ஜூனில் நிறைவு செய்து, குடிநீர் வினியோகம் துவக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். அமராவதி ஆற்றின் மூலம், மானுப்பட்டி - ஜோதிபாளையம் மற்றும் மடத்துக்குளம் பேரூராட்சி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் கண்ணாடிப்புத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டங்கள், கணியூர் பேரூராட்சி, ஜோத்தம்பட்டி ஊராட்சிகளுக்கு, கணியூர் கூட்டுக்குடிநீர் திட்டம், மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய கிராமங்கள் பயன்பெறும் வகையில் தாமரைப்பாடி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் கல்லாபுரம், சங்கராமநல்லூர் பேரூராட்சி, கொழுமம் ஊராட்சி, கொமரலிங்கம் பேரூராட்சி உட்பட வழியோரங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஆற்றில் இருந்து நேரடியாக குடிநீர் பெற்று வருகின்றன.

அமராவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதில்லை. பல ஆண்டுகளாக ஆற்றில் மணல் வளமும் சுரண்டப்படுவதால், ஆண்டுதோறும் பல மாதங்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை. இதனால், புதிய திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டது. தமிழக அரசு, 28.78 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. திருமூர்த்தி அணை - தளி கால்வாயில், தினமும் 13.81 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து வினியோகம் செய்யப்பட உள்ளது. குடிநீர் திட்ட பணிகள், 2009 மார்ச்சில் துவங்கியது. 18 மாதம் திட்ட காலமாக கொண்டு, 2010 அக்., மாதத்துக்குள் பணி நிறைவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. திருமூர்த்தி அணையில் தண்ணீர் எடுக்கும் வகையில் பம்ப்பிங் ஸ்டேஷன், மெதுமணல் தொட்டிகள் உட்பட நவீன சுத்திகரிப்பு நிலையம், 12 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஊரக பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்ல, 38 கி.மீ., நீளமுள்ள பெரிய அளவிலான குழாய்கள் அமைக்கும் பணி, 127 கி.மீ., நீளத்துக்கு சிறிய அளவிலான குழாய்கள் பதிக்கும் பணி துவங்கியது. இப்பகுதிகளில், ஏற்கனவே உள்ள 120 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுடன், புதிதாக ஐந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் பிரித்து வழங்கும் குழாய்களும், சிறிய அளவிலான பம்ப்பிங் ஸ்டேஷன் பணிகளும் ஓரளவு நிறைவு பெற்றுள்ளது. துவங்கியது முதலே திட்டப்பணிகள் முழுவீச்சில் நடந்ததால், தற்போது 90 சதவீதம் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தாண்டு பருவமழை பொய்த்து, ஐந்து மாதமாக மழை இல்லாததால், அமராவதி அணை வறண்டு, வழியோர கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக் கும் வகையில், புதிய திருமூர்த்தி திட்ட பணிளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மேலும் தீவிரப் படுத்தியுள்ளனர். வரும் ஜூன் மாதத்துக்குள் பணிகள் நிறைவு செய்யப்படும் எனவும், இதற்கு முன்னதாகவே குடிநீர் திட்டத்தின் வெள்ளோட்டம் துவங்கும் வாய்ப் புள்ளதாகவும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Wednesday, 24 March 2010 10:36