Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடியாத்தம் குடிநீர் பிரச்னை தீர ரூ.10 கோடி ஒதுக்க வேண்டும்

Print PDF

தினமணி 29.03.2010

குடியாத்தம் குடிநீர் பிரச்னை தீர ரூ.10 கோடி ஒதுக்க வேண்டும்

வேலூர், மார்ச் 28: குடியாத்தம் சட்டப் பேரவை தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கான திட்டங்களுக்காக ரூ.10 கோடி ஒதுக்க வேண்டுமென அத்தொகுதி எம்எல்ஏ ஜி.லதா, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வருக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அனுப்பிய மனு விவரம்:

குடியாத்தம் சட்டப் பேரவை தொகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. குடிநீருக்கு அவதியுறும் நிலையுள்ளது. குடியாத்தம் நகரில் உள்ள 400 ஆழ்துளை கிணறுகளில் 250-க்கும் மேற்பட்டவை வற்றிவிட்டன.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மோர்தானா அணையை திறந்து விட்டதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியாத்தம் பகுதியில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்னையை போக்க பசுமாத்தூர் பாலாறு படுகையில் நீர் உறிஞ்சி கிணறுகள் அருகே அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை ரத்து செய்ய வேண்டும்.

பசுமாத்தூர் தலைமை நீரேற்று நிலையத்தில் புதிதாக 3 நீர்உறிஞ்சி கிணறுகள், மின்மோட்டார், பைன் லைன்கள் அமைக்க ரூ.40 லட்சம், மாதனூர் பாலாற்றங்கரையில் புதியதாக 3 நீர் உறிஞ்சி கிணறுகள் அமைக்க ரூ.30 லட்சம், மாதனூரில் 5, பீமன்பட்டியில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்க ரூ.7 லட்சம், மின் மோட்டார்கள், 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு பைப் லைன்கள் அமைத்திட ரூ.63 லட்சம், பாக்கம் குடிநீர் மேம்பாட்டு திட்டம் கீழ் 5 ஆழ்துளை கிணறுகள், மின் மோட்டார்கள், 3.5 கிலோ மீட்டர் பைப் லைன்கள் அமைக்க ரூ.20 லட்சம்,

குடியாத்தம் நகரம், ஊராட்சிப் பகுதிகளில் நூறு ஆழ்துளை கிணறுகள் அமைக்க ரூ.1 கோடி, மோர்தானா அணையில் இருந்து நீர் உறிஞ்சி கிணறுகள் அமைத்து, குழாய் மூலம் நகராட்சி பகுதிகளுக்கும், ஊராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் வழங்க ரூ.2.50 கோடி, குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்ற ரூ.5 கோடி என மொத்தம் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர் அந்த மனுவில் கோரியுள்ளார்.

Last Updated on Monday, 29 March 2010 10:39