Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறுவாணி குடிநீர் வினியோகம் பாதியாக குறைப்பு: மாநகராட்சி அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

Print PDF

தினமலர் 31.03.2010

சிறுவாணி குடிநீர் வினியோகம் பாதியாக குறைப்பு: மாநகராட்சி அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

கோவை : 'கோவை மாநகராட்சியில், குடிநீர் வினியோக நேரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இனி, ஒருநாள் விட்டு ஒருநாள் நான்கு மணி நேரத்திற்கு மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படும்' என்று மாநகராட்சி அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவானது.

கோவை மாநகராட்சியிலுள்ள நான்கு மண்டலத்திற்குட்பட்ட 72 வார்டுகளில் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. மேற்கு,தெற்கு மண்டலப்பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சிறுவாணி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு மண்டல பகுதிகளில் நான்கு நாட்களுக்கொருமுறை பில்லூர் குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி பொதுமக்களிடம் உறுதியளித்தது. ஆனால், ஆறு நாள் முதல் எட்டு நாட்களுக்கொருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் 10 நாட்களிலிருந்து 12 நாட்களுக்கொருமுறையே குடிநீர் வினியோகம் நடக்கிறது. மாநகராட்சி கூட்டங்களில் கிழக்கு, வடக்கு மண்டல பகுதி கவுன்சிலர்கள் அடிக்கடி குடிநீரை பற்றிதான் புகார் கூறுகின்றனர். இது வரை கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் சரிசெய்யவுமில்லை;முறைப்படுத்தவும் இல்லை.

கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் மற்றும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இருப்பில் உள்ள குடிநீரை கொண்டு வினியோகத்தை சரியான முறையில் மேற்கொள்ள மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

சிறுவாணி அணை பராமரிப்பு இன்ஜினியர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது: சிறுவாணி அணையிலிருக்கும் குடிநீர் ஜூன் மாதம் வரை தாக்குபிடிக்கும். அது வரை வழக்கம் போல் மாநகராட்சிக்கு சிறுவாணி குடிநீர் வழங்க தயாராக இருக்கிறோம்.

பில்லூர் அணை இன்ஜினியர் சுப்ரமணியம்: பில்லூர் அணையிலிருந்து குடிநீர் தற் போது வழக்கம் போல் வினியோகிக்கிறோம். மின்தடை ஏற்பட்டால் எதுவும் சொல்ல முடியாது. ஒரு மோட்டார் இயங்கி அடுத்த 10வது நிமிடத்தில் அடுத்த மோட்டார் இயங்கும். அடுத்த 10வது நிமிடத்தில் மற்றொரு மோட்டார் இயங்கும். நான்கு மோட்டார் இயங்கினால்தான் பில்லூர் குடிநீர் போதுமான அளவு பம்ப் செய்து நகருக்கு வந்து சேரும். மின்தடையில்லாமல் இருந்தால் எந்த தடங்கலும் இல்லாமல் குடிநீரை கொடுக்க இயலும். போதுமான அளவு நீர் உள்ளது. அதோடு அணைக்கு குடிநீர் வரத்தும் உள்ளது.

கல்யாணசுந்தரம்: அணையிலிருந்து நகருக்கு சரியான முறையில் குடிநீர் வந்து சேருகிறது. மாநகராட்சிப்பகுதிக்குள் வினியோகம் செய்யும் முறையில் நிறைய மாற்றம் செய்ய வேண்டும். மாநகராட்சி பணியாளர் மற்றும் அதிகாரிகள் செய்யும் குளறுபடிகளால் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சாதாரண, நடுத்தர மக்கள் மட்டுமே குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். மருத்துவமனை, ஓட்டல், ரெஸ்டாரன்ட், லாட்ஜ் வி..பி., வீடுகள் போன்றவற்றில் குடிநீர் பஞ்சம் ஏற்படுவதில்லை. இதை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் ஒரு குழு அமைக்க வேண்டும். அந்த பகுதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயின் அளவு என்ன, வினியோகிக்கும் கால அளவு என்ன என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

பத்மநாபன்: மூன்று மாதங்களாக வடக்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. புகார் தெரிவித்து பலனில்லை. பில்லூரிலிருந்து வழக்கமாக கொடுக்கும் 65 எம்.எல்.டி., அளவை குறைக்க வேண்டாம். சில நேரங் களில் 60 ஆக குறைவதால் உயரமான பகுதிகளுக்கு குடிநீர் வினி யோகிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கூடுதலாக சிறுவாணியிலிருந்து எட்டு எம்.எல்.டி., கொடுக்க வேண்டும்.

உதயகுமார்: கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் தீர்க்கப்படாத பிரச்னைகளில் குடிநீர் முக்கியமானது. எத்தனையோ கூட்டங்களில் பல முறை புகார் தெரிவித்துவிட்டோம்; எந்த பலனுமில்லை. குடிநீர் அவசியமான ஒன்று, அதை வழங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த காரணமும் சொல்லக்கூடாது. சீரான குடிநீர் வினியோகத்திற்கு வழி செய்யவேண்டும். அதற் கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.

மேயர் வெங்கடாசலம்: கிழக்கு, வடக்கு மண்டல பகுதியில் எட்டு எம்.எல்.டி., குடிநீர் வழங்கப்படும். தெற்கு,மேற்கு மண்டல பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யும் நாட்களில் மாற்றம் செய்யப்படும்.

கமிஷனர் அன்சுல்மிஸ்ரா: கிழக்கு, வடக்கு மண்டல பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு மாநகராட்சிக்கு வரும் சிறுவாணி குடிநீரிலிருந்து எட்டு எம்.எல்.டி., நீர் வினியோகிக்கப்படும். அதை சரிக்கட்ட தெற்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் வழக்கமாக குடிநீர் வினியோகிக்கப்படும் நேரம் குறைக்கப்படும். இது குறித்து மாநகராட்சி குடிநீர் வினியோகம் செய்யும் இன்ஜினியர் ஒருவர் கூறுகையில்,'எட்டு எம்.எல்.டி., குடிநீர் பகிர்ந்து கொடுப்பதால், அதை சரிகட்ட எட்டு மணி நேரம் விடப்பட்ட குடிநீரின் அளவு நான்கு மணி நேரமாக குறைக்கப்படும்' என்றார்.

Last Updated on Wednesday, 31 March 2010 06:36