Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் நகர மக்கள்

Print PDF

தினமணி 21.07.2009

குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமா?

கோவில்பட்டி, ஜூலை 20: கோவில்பட்டி குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தரும் தனி குடிநீர்த் திட்டம் எப்போது நிறைவேறும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் நகர மக்கள்.

கோவில்பட்டியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடி வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்படுகிறது.

இதனால், பொதுமக்கள் குடங்களுடன் அடிக்கடி வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளும் தங்கள் பங்குக்கு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

கோவில்பட்டிக்கு வரும் குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதும், மின்தடையால் குடிநீரை நீரேற்று நிலையங்களுக்கு பம்பிங் செய்து அனுப்ப முடியாததுமே குடிநீர் பிரச்னைக்கு காரணங்கள் என கூறுகின்றனர் அதிகாரிகள்.

ஆனால், உண்மையில் இவை மட்டுமே காரணங்கள் அல்ல. 30 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட குடிநீர்த் திட்டம் காலாவதியாகி விட்டதுதான் இதற்கு முக்கிய காரணம்.

கோவில்பட்டி பகுதிக்கு குடிநீர் விநியோகிப்பதற்காக 1976-ம் ஆண்டு சீவலப்பேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின்படி, சீவலப்பேரியிலிருந்து தாமிரபரணி நீரை எடுத்து, கங்கைகொண்டான், கயத்தாறு வழியாக கோவில்பட்டிக்கு கொண்டுவர வேண்டும்

மேலும், இதன்மூலம் கோவில்பட்டி மட்டுமல்லாமல், எட்டையபுரம், சாத்தூர், கழுகுமலை போன்ற அருகிலுள்ள ஊர்களும், குழாய் வரும் பாதையிலுள்ள கிராமங்களும் பயன்பெற்று வந்தன.

தற்போது, கிராம கூட்டுக் குடிநீர்த் திட்டம் வந்தபிறகு எட்டையபுரம், சாத்தூர், கழுகுமலை போன்ற ஊர்கள் இதிலிருந்து விலக்கப்பட்டன.

இதையடுத்து, தற்போது கோவில்பட்டி உள்பட குழாய் வரும் பாதையிலுள்ள சுமார் 27 வழியோர கிராமங்கள் மட்டும் சீவலப்பேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் பெற்று வருகின்றன.

தற்போது வழியோரம் உள்ள 26 கிராமங்களுக்கு தனியாக ஒரு சிறப்பு கிராம கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அதிகாரிகள் தயாரித்து, பணிகள் அனைத்தும் முடியும் நிலையில் உள்ளன. இத்திட்டம் அமலுக்கு வந்தாலும்கூட கோவில்பட்டியின் குடிநீர் பிரச்னை நீடிக்கத்தான் செய்யும் எனக் கூறப்படுகிறது.

தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 50 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதாகக் கூறுகின்றனர் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள். ஆனால், சுமார் 30 முதல் 35 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே தருவதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர் நகராட்சி நிர்வாகத்தினர்.

இந்நிலையில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் புதிய திட்டத்தைத் தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளனர். இந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக புதிய தனி குடிநீர்த் திட்டம் அமையும் எனக் கூறப்படுகிறது.

ரூ.50.16 கோடி மதிப்பீட்டிலான இத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்துவதாக உள்ளன. இத் திட்டத்திற்கு மத்திய அரசு சுமார் ரூ.36 கோடியும், நகராட்சி நிர்வாகம் சுமார் ரூ.10 கோடியும், மீதித் தொகையை மாநில அரசும் வழங்க உள்ளன.

இந்த ஆண்டிலேயே நிதி ஒதுக்கப்பட்டாலும், இத் திட்டம் நிறைவேற 2 ஆண்டுகளாகும் என்கின்றனர் அதிகாரிகள்.

இத் திட்டத்திற்கு அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து, நீண்டகால குடிநீர் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர் மக்கள்.