Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லைக்கு புதிய குடிநீர்த் திட்டங்கள் கொண்டுவருவதற்கு மாநகராட்சி முயற்சி

Print PDF
தினமணி 21.07.2009

நெல்லைக்கு புதிய குடிநீர்த் திட்டங்கள் வருமா?

திருநெல்வேலி, ஜூலை 20: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்க்க, துணை முதல்வர் ஸ்டாலினிடம் முறையிட முடிவு செய்துள்ளதாக மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இம் மாநகர் பகுதியில் சமீபகாலமாக குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் பிரச்னைக்குரிய காரணங்களை அறிவதற்காக, மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமையில், துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் த. மோகன், மண்டலத் தலைவர்கள் எஸ். விஸ்வநாதன், எஸ். முகம்மது மைதீன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

இக் குழுவினர் மணப்படைவீடு தலைமை நீரேற்றும் நிலையம், கொண்டாநகரம் நீரேற்றும் நிலையம், பொட்டல் உறைகிணறு, திருமலைகொழுந்துபுரம், கக்கன்நகர் ஆகிய இடங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை ஆய்வு செய்தனர்.

இங்கு குடிநீர் விநியோகிப்பதில் ஏற்படும் பிரச்னை குறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் மேயர் விசாரணை செய்தார்.

இதேபோல, பாளையங்கோட்டை இலந்தகுளத்தில் ரூ.1 கோடியில் "தீம் பார்க்' அமைய உள்ள இடத்தையும் மேயர் ஆய்வு செய்தார்.

பின்னர், நிருபர்களிடம் மேயர் கூறியதாவது: குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, துணை முதல்வர் ஸ்டாலினை புதன்கிழமை சந்திக்க உள்ளோம்.

அப்போது மாநகருக்கு புதிய குடிநீர்த் திட்டங்கள் கொண்டுவருவதற்கு அவரிடம் முறையிடுவோம். பெருமாள்புரம், தியாகராஜநகர், என்.ஜி.. காலனி பகுதியில் ரூ.17 கோடியில் புதிய குடிநீர்த் திட்டமும், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி பகுதிகளில் ரூ.5 கோடியில் புதிய குடிநீர்த் திட்டங்களும் கொண்டு வருவதற்கு அவரிடம் வலியுறுத்துவோம்.

இந்த இரு திட்டங்களும் ஏற்கெனவே அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல பழைய குடிநீர்க் குழாய்களை மாற்றுவதற்கு ரூ.3 கோடி நிதியைப் பெறவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் மேயர்.