Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பேரூராட்சி கிணறுகளை தூர்வார நடவடிக்கை

Print PDF

தினமணி 08.04.2010

கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பேரூராட்சி கிணறுகளை தூர்வார நடவடிக்கை

களியக்காவிளை, ஏப். 7: களியக்காவிளை பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள பொது கிணறுகளை தூர்வாருவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இப் பகுதியில் கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை எடுப்பது என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

களியக்காவிளை பேரூராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் இடங்கள் மற்றும் அதுபற்றி ஆலோசித்து தீர்வு ஏற்படுத்துதல் சம்பந்தமான அவசரக் கூட்டம் மன்றத் தலைவி எஸ். இந்திரா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. செயல் அலுவலர் இரா. சங்கர் முன்னிலை வகித்தார்.

கூட்டம் தொடங்கியதும் 8-வது வார்டு உறுப்பினர் என். விஜயேந்திரன், பேரூராட்சிப் பகுதிகளில் செயலிழந்து காணப்படும் குடிநீர் வால்வுகளை பழுதுநீக்கி சரி செய்வது, பேரூராட்சிக்கு சொந்தமான தூர் வாராத கிணறுகளை தூர்வாரும் பணியினை மேற்கொள்ளவேண்டும்.

மேலும், முறைகேடாக குடிநீர் எடுக்கப்படும் நல்லிகளை அடைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றார். இது தீர்மானமாக பிற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க 10 சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கவும், 2 அடி பம்புகள் அமைக்கவும் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்வதாக செயல் அலுவலர் மன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.

பேரூராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும், குடி தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க வேண்டும் என மன்ற உறுப்பினர்கள் ஆலோசனை தெரிவித்தனர். தொடர்ந்து 2-வது வார்டு உறுப்பினர் என். விஜயானந்தராம், நெய்யாறு இடதுகரை கால்வாய் தூர்வாரும் பணியை மேற்கொண்டால் கேரள பகுதியிலிருந்து கசிந்து வரும் நீரால் வன்னியூர் ஊராட்சி, களியக்காவிளை பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு குறைவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்றார்.

இப் பணியை பேரூராட்சியால் செய்ய முடியாது என்பதால் தமிழக அரசையும், பொதுப் பணித் துறையையும் கேட்டு, தீர்மானம் நிறைவேற்றி அனுப்பலாம் என செயல் அலுவலர் தெரிவித்தார். இக் கூட்டத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் சலாவுதீன், உறுப்பினர்கள் பத்மினி, ராதா, ராயப்பன், . ராஜு, கமால், என். விஜயேந்திரன், விஜயானந்தராம், சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 08 April 2010 09:45