Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் பிரச்னையை சமாளிப்பது குறித்து தலைமை செயலர் கலந்துரையாடல்

Print PDF

தினமலர் 16.04.2010

குடிநீர் பிரச்னையை சமாளிப்பது குறித்து தலைமை செயலர் கலந்துரையாடல்

விழுப்புரம் : தமிழகத்தில் குடிநீர் பிரச்னைகளை சமாளிக்க தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து தமிழக தலைமை செயலர் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் கலந்துரையாடல் நடத்தினார்.கோடை காலம் நிலவுவதால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது. இதனை சமாளிக்கும் வழிமுறைகள் மற்றும் தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து தமிழக தலைமை செயலர் ஸ்ரீபதி, தமிழக வருவாய்த்துறை நிர்வாக கமிஷனர் சுந்தரதேவன் ஆகியோர் 10 மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று காலை வீடியோ கான்பரன்சிங்கில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர்.

விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல் மாவட்ட கலெக் டர்கள் கலந்து கொண்டனர். கோடைக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் செயல்படுத்தும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ள மாவட்டங்களில் தண்ணீர் இருப்பு குறித்து வடிகால் வாரியம் மூலம் ஆய்வு செய்ய வேண்டும். அந்தந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியை குடிநீர் பிரச்னையை தீர்க்க பயன்படுத்த வேண்டும். பல இடங்களில் மழை அளவு குறைவாக இருந்ததால் குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதை வறட்சி என கூறாதீர்கள். குடிநீர் பிரச்னை என மட்டும் கூற வேண்டும். குடிநீர் பிரச்னைகளை சமாளிக்க அதிக நிதி கேட்டு கலெக்டர்கள் பரிந்துரை அனுப்பியுள்ளனர். தற்போது ஒதுக்கும் நிதியில் நடவடிக்கை எடுப்பது குறித்து திட்ட அறிக்கை அனுப்ப வேண்டும். குடிநீர் மோட்டார்கள் இயக்க மின்சாரம் நிறுத்தக் கூடாது. மாவட்ட கலெக்டர்கள் மின்வாரியத்தில் பேசி குடிநீர் விநியோகிக்க வசதி செய்து கொள்ளலாம். குடிநீர் பிரச்னையில் மறியல் நிகழும் பகுதிகள் இருந்தால் ஆய்வு நடத்தி குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என அறிவுரை கூறப்பட்டன.

நிகழ்ச்சியில் விழுப்புரம் கலெக்டர் பழனிசாமி பேசுகையில்,'மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை எந்த பகுதியிலும் இல்லை. சின்ன சேலம், வானூர், மேல்மலையனூர், திண்டிவனம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் குடிநீர் பிரச்னை சிறிதளவு உள்ளது. திண்டிவனத்தை பொறுத்த வரை மின்சாரம் தட்டுப்பாடு காரணமாக ஜெனரேட்டருக்காக அதிக நிதி கோரியிருந்தோம். மின்சாரம் தடையின்றி கிடைத்தால் அதிகளவு நிதி தேவையிருக்காது. ஒதுக்கீடு செய் துள்ள ஒரு கோடி ரூபாயில் குடிநீர் பிரச்னைகளை சமாளிக்க வழிமுறைகளை தெரிவிக்கிறோம்' என்றார். டி.ஆர்..,வெங்கடாஜலம், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் நவ்ஷாத் உட்பட பலர் உடனிருந்தனர்.

Last Updated on Friday, 16 April 2010 06:46