Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மே மாதத்திலிருந்து 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் : கவுண்டம்பாளையம், வடவள்ளிக்கு அடித்தது 'லக்'

Print PDF

தினமலர் 17.04.2010

மே மாதத்திலிருந்து 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் : கவுண்டம்பாளையம், வடவள்ளிக்கு அடித்தது 'லக்'

பெ.நா.பாளையம் : கவுண்டம்பாளையம்-வடவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், இவ்விரு பகுதிகளிலும் நிலவி வந்த குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. கோவை நகருக்கு அருகே உள்ள கவுண்டம்பாளையம் நகராட்சி, வடவள்ளி பேரூராட்சியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்க கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் 2007 ஜூலை மாதம் துவக்கப்பட்டது.

பவானி ஆற்றில் தேக்கம்பட்டியில் நான்கு மீட்டர் ஆழம், ஆறு மீட்டர் விட்டமுள்ள உள்வாங்கி கிணற்றில் நீர் தேக்கி 3100 எச்.பி., திறனுள்ள மோட்டார்களால் நீர் உந்தப்படுகிறது. ஒரு நிமிடத்துக்கு 61 மீட்டர் நீளத்துக்கு 4583 லிட்டர் என்ற அளவில் பிரதானக் குழாயில் நீர் செல்லும்.பவானியிலிருந்து வீரபாண்டி பிரிவு நீர் உந்து நிலையத்திற்கு வந்து சேரும் நீர் அங்குள்ள 100 எச்.பி., அளவில் உள்ள 3 மோட்டார் மூலம் உந்தப்படும். மூன்றாவது மற்றும் 4வது கட்டத்துக்கு பிறகு, மேல்நிலைத் தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட்டு, வினியோகம் செய்யப்படும்.

திட்ட மதிப்பீட்டு காலம் 18 மாதம் என நிர்ணயம் செய்யப் பட்டது. இதன்படி, 2008 டிசம்பருக்குள் பணிகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆட்கள் பற்றாக்குறை, மூலப்பொருட்களின் விலையேற்றம், தொடர் மழை என பல காரணங்களால் 2009 மார்ச் வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. அப்போதும் பணிகளை முடிக்க முடியவில்லை. பல ஆண்டுகளாக இழுத்து வந்த இந்த பணி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சில தினங்களுக்கு முன் தேக்கம்பட்டியில் இருந்து 6.2 கி.மீ., தொலைவிலுள்ள செல்லப்பனூர் வரை பதிக்கப் பட்டுள்ள குழாயில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை விட்டு, சோதனை ஓட்டம் நடத்தப் பட்டது.

அதன் பின், கவுண்டம்பாளையம் நகராட்சி வரை சோதனை ஓட்டம் முடிந்தது. இப்போது 95 சதவீதப் பணிகள் முடிந்து விட்டன. நீர் வினியோகத்துக்காக, கவுண்டம்பாளையம் நகராட்சியில் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள 2 தொட்டிகளும், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள 2 தொட்டிகளும், 4 லட்சம் லிட்டர் கொள் ளளவுடன் 2 தொட்டிகளும், 3 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் ஒரு தொட்டியும் என மொத்தம் 7 மேல்நிலை குடிநீர்த்தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டன. மொத்தம் 50 கி.மீ., நீளத்துக்கு வீடுகளுக்கான குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் நகராட்சித் தலைவர் சுந்தரம் கூறுகையில், '' கவுண்டம்பாளையம் நகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 70 லட்சம் லிட்டரும், வடவள்ளி பேரூராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் நீரும் தேவைப்படுகிறது. தற்போது, இப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பில்லூர் குடிநீர் சப்ளையாகிறது. இத்திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதால் மே மாத துவக்கத்தில் இருந்து அனைத்து வீடுகளுக்கும் 3 நாட்களுக்கு ஒரு முறை 2 மணி நேரம் குடிநீர் வினியோகம் நடக்கும்,'' என்றார். இத்திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதால் கவுண்டம்பாளையம் நகராட்சியிலும், வடவள்ளி பேரூராட்சியிலும் உள்ள பல லட்சம் மக்களுக்கு நீண்ட நாட் களாக இருந்த குடிநீர் பிரச் னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

Last Updated on Saturday, 17 April 2010 06:27