Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு

Print PDF

தினமணி 19.04.2010

நெல்லை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு

அம்பாசமுத்திரம், ஏப். 18: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தொழிற்சாலை தேவைகளுக்கு இந்த அணைகளில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. 2009ஆம் ஆண்டு பருவமழை எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் பெய்த காரணத்தால் அணைகள் அனைத்தும் நிரம்பின.

கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், இவ்விரு மாவட்டங்களில் பரவலாக குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகப் புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக, குடிநீர் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலும் பரவலாக குடிநீர்த் தட்டுப்பாடு எழுந்துள்ளது.

விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பேட்டை, திருநெல்வேலி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் உறைகிணறுகள் அமைத்து, குடிநீர்த் திட்டங்களுக்கு நேரடியாக நீரைக் கொண்டுசென்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் பிற பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முன் கார்பருவ சாகுபடி தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை அணைகளின் நீர்மட்டம் நிலவரம் வருமாறு:

பாபநாசம் அணையில் 80.50, சேர்வலாறு அணையில் 90.35, மணிமுத்தாறு அணையில் 84.85 அடியாக இருந்தது.

பாபநாசம் அணையில் இருந்து 505 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. மணிமுத்தாறு அணையில் இருந்து பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு 350 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தாமிரபரணி ஆற்றில் குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் குடிநீர்த் திட்ட உறைகிணறுகள் அமைந்துள்ள பகுதிக்கு போதிய நீர் கிடைக்காமல் குடிநீர் விநியோகம் முழுமையாகச் செய்ய முடியாத நிலை இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர்த் திட்டங்கள் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் கோடைக்காலத்தில் மேடான பகுதிகளுக்கு சீராக குடிநீர் கிடைப்பதில்லை என்ற கருத்தும் உள்ளது. அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தும் இம்மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு எழுந்திருப்பது பொதுமக்களை வேதனையடையச் செய்துள்ளது. எனவே குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Monday, 19 April 2010 10:49