Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருமூர்த்தி புதிய குடிநீர் திட்டம் மூன்று மாதத்தில் நிறைவடையும்: தலைமை பொறியாளர் தகவல்

Print PDF

தினமலர் 21.04.2010

திருமூர்த்தி புதிய குடிநீர் திட்டம் மூன்று மாதத்தில் நிறைவடையும்: தலைமை பொறியாளர் தகவல்

உடுமலை: திருமூர்த்தி புதிய கூட்டு குடிநீர் திட்ட பணிகள் மூன்று மாதத்தில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அமராவதி ஆற்றின் மூலம் பயன்பெற்று வரும், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியம் மற்றும் மடத்துக்குளம், சங்கராமநல்லூர், கொமரலிங்கம், கணியூர் பேரூராட்சிகளை சேர்ந்த 112 ஊரக குடியிருப்புகளுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு 28.76 கோடி ரூபாயும், ஆண்டு பராமரிப்புக்கு 93 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கியது. கடந்தாண்டு குடிநீர் திட்ட பணிகள் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது. தளி கால்வாயிலிருந்து125 மீட்டர் நீளமுள்ள குடிநீர் குழாய்கள் மூலம் சேகரிப்பு கிணற்றிற்கு எடுத்து வரப்படுகிறது. இங்கிருந்து மோட்டார்கள் மூலம், 675 மீட்டர் நீளம், 450 மி. மீ., அகலம் கொண்ட குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இத்திட்ட பணிகளை, குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன், மேற் பார்வை பொறியாளர் உமாசங்கர், நிர்வாக பொறியாளர் மோகன்பாபு, உதவி பொறியாளர் உலக நாதன் , மடத்துக்குளம் ஒன்றிய குழு தலைவர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன்; '' 'குடிநீர் திட்ட பணிகள் மூன்று மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து குடிநீர் வினியோகம் துவங்கும்'' என்றார். மடத்துக்குளம் ஒன்றிய குழு தலைவர் ஜெயராமகிருஷ்ணன்; 'மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள கிராமங்களுக்கு கூடுதல் குடிநீர் வழங்க வேண்டும்; திட்டத்தில் விடுபட்டுள்ள மற்ற கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதோடு, தாமரைப்பாடி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் இணைக்காமல் உடையார் பாளையம் பம்பிங் ஸ்டேசனிலிருந்து தனி குழாய் மூலம் குடிநீர் எடுத்து வர வேண்டும். இதனால், தாமரைப்பாடி குடிநீர் திட்டத்தின் கீழும் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும்' என்றார்.