Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.135 கோடியில் 32 புதிய குடிநீர் திட்டங்கள்

Print PDF

தினமணி 23.04.2010

ரூ.135 கோடியில் 32 புதிய குடிநீர் திட்டங்கள்

புதுச்சேரி, ஏப்.22: புதுச்சேரியில் ரூ.135 கோடியில் 32 புதிய குடிநீர் திட்டங்கள் கண்டறியப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பொது சுகாதாரத்துறை அமைச்சர் எ. நமச்சிவாயம் பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: வரும் நிதியாண்டில் ரூ.195 கோடியில் 32 புதிய குடிநீர் திட்டங்கள் கண்டறியப்பட்டு நபார்டு அல்லது ஹட்கோ வங்கி மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்.

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: நகரப் பகுதியில் கடல் நீர் ஊடுருவுவதாலும் கிராமங்களில் சில பகுதிகளில் இரும்புத் தாது அதிகம் உள்ளதாலும் நீரின் சுவை மாறியுள்ளது. பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தரமான குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் புதுவை ரெயின்போ நகரில் ரூ.20 லட்சத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, விரைவில் சுய உதவிக்குழுக்கள் மூலம் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் ரூ.7 விலையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.

இது போன்ற சுத்திகரிப்பு நிலையங்கள் புதுச்சேரியில் ஐயனார் நகர் (உப்பளம் தொகுதி), விடுதலை நகர் (முதலியார்பேட்டை தொகுதி) ஆகிய 2 இடங்களிலும், காரைக்காலில் அக்கரைவட்டம், காரைக்கால் மேடு ஆகிய இடங்களிலும் உடனடியாக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். நகர மற்றும் கிராமப் பகுதிகளில் முடிவடையாத 18 குடிநீர் திóட்டங்கள் ரூ.35.11 கோடிக்கு அரசின் ஒப்புதல் பெற்று பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. புதுவை நகருக்குட்பட்ட மண்டலம் 1-ல் உள்ள அனைத்து குடிநீர் விநியோக குழாய்களை ரூ.60 கோடி செலவில் மாற்றும் திட்டம் அடுத்த நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். ஊசுடு ஏரி மற்றும் கரையாம்புத்தூர், மணமேடு ஆகிய கிராமங்களில் இருந்து தொலை தூர நீராதாரங்கள் மூலம் புதுவை நகருக்கு குடிநீர் வினியோகம் முறையான ஆய்வுக்கு பின் மேற்கொள்ளப்படும்.

கழிவு நீர் திட்டம்: நெல்லித்தோப்பு மற்றும் அதனை சார்ந்த விடுபட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் ரூ.7.30 கோடியில், வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும். புதுச்சேரி நகர பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் வீதியிலிருந்து குருசுகுப்பம் பம்ப் ஹவுஸ் வரை உள்ள கான்கிரீட் குழாய்களை பெரிய விட்டமுள்ள இரும்பு குழாய்களாக மாற்ற சுமார் ரூ.3 கோடி அளவில் வரும் நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து கழிவு நீர் குழாய்களில் உள்ள அடைப்புகளை சுத்தம் செய்து, சுத்தம் செய்வதை சிசிடிவிசி மூலம் ஊர்ஜிதம் செய்துகொள்ளும் பராமரிப்பு பணிகள் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். முத்துலிங்கம்பேட்டை மற்றும் பாரி நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தப்படும்.

காரைக்கால் குடிநீர் திட்டம்: காரைக்கால் நகரின் மையப்பகுதிக்கான குடிநீர் வழங்கும் அபிவிருத்தி திட்டத்தின் மதிப்பீடு, ரூ.38.39 கோடிக்கு தயாரிக்கப்பட்டு, நகர அபிவிருத்தி திóட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெருவதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். காரைக்கால் நகரின் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களுக்கான குடிநீர் வழங்கு அபிவிருத்தி திட்டங்கள் முறையே ரூ.50.51 கோடிக்கும், ரூ.44.88 கோடிக்கும் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல் பெற அனுப்பப்பட்டுள்ளது.

கிராமப்பகுதிகளுக்கான குடிநீர் வழங்கு திóட்டங்களில் கோட்டுச்சேரி குயவன் குளத்து பேட், திருநள்ளார் மேலசுப்புராயபுரம், காரைக்கால் புத்தமங்கலம் பேட், கீழ்ஓடுதுறை பேட், நடுஓடுதுறை பேட் ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

மாஹே குடிநீர் திட்டம்: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பந்தக்கல், பள்ளூர், செருகல்லாய், கிழக்கு பள்ளூர் மற்றும் மாஹே டவுன் பகுதிகளில் 70 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். ஹட்கோ நிதியுதவியுடன் ரூ.105 லட்சம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க நில ஆர்ஜிதம் செய்யப்படும். குடிநீர் தேவையை நிறைவேற்றும் பொருட்டு சுமார் 100 கி.மீ. அளவிற்கு ரூ.16.5 கோடி மதிப்பீட்டில் குடிநீர் விநியோக குழாய்கள் அமைக்கப்படும்.

யேனம் குடிநீர் திட்டம்: தெüலேஸ்வரம் அணையில் இருந்து யேனம் வரை உள்ள 75 கி.மீ. தூரம் குழாய் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 23 April 2010 10:30