Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், முன்னதாகவே நிறைவேற்றப்படும் : ஸ்டாலின் உறுதி

Print PDF

தினமலர் 24.04.2010

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், முன்னதாகவே நிறைவேற்றப்படும் : ஸ்டாலின் உறுதி

சென்னை : ''ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்கப்படும்,'' என்று, துணை முதல்வர் ஸ்டாலின் உறுதி தெரிவித்தார். சட்டசபையில், ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.., உறுப்பினர் அன்பழகன் பேசும்போது நடந்த விவாதம்: மின்வெட்டு காரணமாக, கிராமங்களில் உள்ள மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகின்றன. குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. .தி.மு.., ஆட்சி காலத்தில் 24 மாவட்டங்களில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. அத்திட்டங்கள், இந்த ஆட்சியில் இன்னும் முடிக்கவில்லை. அடையாறு பூங்கா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், .தி.மு.., ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை.

கடந்த 2007-08ல் ஒட்டுமொத்த திட்டங்களுக்கு 62 ஆயிரத்து 626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 56 ஆயிரத்து 707 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், 1986ல் 120 கோடி ரூபாயில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டும், தள்ளிக்கொண்டே போனது. 2008ல் 1,334 கோடியாக உயர்த்தி, திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தினீர்கள். இப்போது 1,929 கோடியாக மதிப்பீடு உயர்ந்துள்ளது. இன்னும் திட்டப் பணிகள் முடியவில்லை.

கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, திட்டத்தை தடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அது, பத்திரிகைகளிலும் வந்துள்ளது. அரசியல் ரீதியாக தீர்வு காண முடியாத பட்சத்தில், சட்ட ரீதியாக தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் நிலை என்ன? எப்போது முடியும்?

துணை முதல்வர் ஸ்டாலின்: அமைச்சர் தெரிவித்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தி தவறு. 1.75 டி.எம்.சி., தண்ணீரையோ அல்லது 2.5 டி.எம்.சி., தண்ணீரையோ நாம் எடுக்கப்போவதில்லை. 1.4 டி.எம்.சி., தண்ணீரை மட்டும் தான் எடுக்கப் போகிறோம். அதுவும், தமிழக எல்லைப் பகுதியில் இருந்து தான் இந்த நீரை எடுக்கப் போகிறோம்.

அம்மாநில அமைச்சர் தெரிவித்தது போல், கர்நாடக எல்லைப் பகுதியில் இருந்து எடுக்கப்போவதில்லை. 1.4 டி.எம்.சி., தண்ணீர் எடுப்பது குறித்து, மத்திய அரசின் அனுமதியை பெற்ற பிறகுதான் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இத்திட்டத்தை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே அரசு நிறைவேற்றும்.அன்பழகன்:

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், மீஞ்சூரில் துவக்கப்பட்டது. அத்திட்டமும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. திட்டத்தை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்டாலின்: இந்த திட்டம், உங்கள் ஆட்சியில் கொண்டு வந்தது தான். .தி.மு.., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்று நாங்கள் விட்டுவிடவில்லை. மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் என்பதால், அதை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

கடல் சீற்றம் காரணமாக, திட்டப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இதனால், நிறுவனத்திற்கோ, அரசுக்கோ எந்தவித இழப்பும் இல்லை. நிறுவனத்தின் அதிகாரிகளை அழைத்துப் பேசி, திட்டப் பணிகளை விரைவில் முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். வரும் ஜூன் இறுதிக்குள், நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கி வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துவிடும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Last Updated on Saturday, 24 April 2010 05:42