Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்: கர்நாடக எல்லையில் தொடங்கப்படவில்லை: ஸ்டாலின்

Print PDF

தினமணி 24.04.2010

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்: கர்நாடக எல்லையில் தொடங்கப்படவில்லை: ஸ்டாலின்

சென்னை, ஏப்.23: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கர்நாடக எல்லையில் தொடங்கப்படவில்லை என்று துணை முதல்வர் மு..ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடக மாநில நீர் பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்த கருத்துகளையும் ஸ்டாலின் மறுத்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ கே.பி. அன்பழகன் பேசியது:

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், இதை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதில் நடப்பது என்ன என்று மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அப்போது, துணை முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டுப் பேசியது:

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை எந்த ஆதாரமும் இல்லாமல் செய்திகளைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளது போல, இந்தத் திட்டத்துக்காக 1.7 டி.எம்.சி. தண்ணீரோ அல்லது 2.5 டி.எம்.சி. தண்ணீரோ எடுக்கத் திட்டமிடப்படவில்லை.

1.4 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இந்தத் திட்டத்துக்காக காவிரி ஆற்றிலிருந்து பெறப்படும். மத்திய அரசிடமிருந்து இதற்கான ஒப்புதலை முறையோடு பெற்ற பிறகுதான் திட்டப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் கர்நாடக மாநில எல்லையில் தொடங்கப்பட்டிருப்பதாகவும் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். அதுவும் உண்மைக்கு மாறான செய்தி.

இந்தத் திட்டப் பணிகள் தமிழக எல்லையில்தான் தொடங்கப்பட்டிருக்கின்றன. கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளவாறு சர்ச்சைக்குரிய கர்நாடக எல்லையில் நிச்சயமாகத் தொடங்கப்படவில்லை.

மத்திய அரசினுடைய அனுமதியைப் பெற்ற பிறகுதான் இது நடந்துகொண்டிருக்கிறது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படக்கூடிய நிலையில் இல்லை என்று அ.தி.மு.. எம்.எல்.. பேசியுள்ளார்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எந்த அளவிற்கு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அதற்கு முன்பே இந்தத் திட்டத்தை நிறைவேற்றுகிற பணியில் இந்த அரசு ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.