Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடையநல்லூரில் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு : எம்.எல்.ஏ.,தகவல்

Print PDF

தினமலர் 26.04.2010

கடையநல்லூரில் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.21 கோடி ஒதுக்கீடு : எம்.எல்..,தகவல்

கடையநல்லூர் : கடையநல்லூர் நகராட்சி குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்காக பொதுமக்களின் நன்மையை கருத்திற்கொண்டு தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் 21 கோடி ரூபாய் சட்டசபையில் அறிவிப்பு செய்திருப்பதாக தொகுதி எம்.எல்..,பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டத்தின் அடிப்படையிலும், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் அடிப்படையிலும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதியினை பொறுத்தவரை தற்போது பெருமளவில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியாகவும், மக்கள் தொகையும் அதிகரித்திருப்பதன் காரணமாகவும் நகராட்சியில் புதிதாக குடிநீர் மேம்பாட்டு திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வந்தது.

மேலும் நகராட்சி பகுதியினை பொறுத்தவரை பெரும்பாலான பகுதிகளுக்கு தண்ணீர் சீராக கிடைக்கப்பெறவில்லை எனவும், ஆற்றுப்படுகையிலிருந்து வாட்டர் டேங்குகளுக்கு வரக்கூடிய பைப் லைன்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு இதன் காரணமாகவும் குடிநீர் வினியோகம் தடைபட்டு வருவதாகவும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும், பொதுநல அமைப்புகள் சார்பிலும் தொகுதி எம்.எல்.. பீட்டர் அல்போன்சிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதனையடுத்து கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் மேம்பாட்டு திட்ட பணியினை மேற்கொள்வதற்கான திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு அதனை ஆய்வு செய்வதற்காக குழுக்களும் வந்து சென்றன. கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி விரிவாக்க கட்டட திறப்பு விழாவிற்கு வருகைதந்த துணை முதல்வர் ஸ்டாலின் கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் மேம்பாட்டு திட்ட பணிகளுக்கான பணிகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்திருந்தார். நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தொகுதி எம்.எல்..,தெரிவித்திருந்தார். இதன்படி துணை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்..கூறியதாவது:- கடையநல்லூர் நகராட்சி மக்களின் நீண்டகால குடிநீர் தேவையினை நிவர்த்தி செய்திடும் பொருட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டத்தினை மேம்படுத்தும் விதமாக பணிகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோரிடம் நேரிடையாக கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதனடிப்படையில் உள்ளாட்சி துறை சார்பில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சட்டசபையில் உள்ளாட்சி துறை மானிய கோரிக்கையின் போது தொகுதி மக்கள் சார்பில் இதற்கான கோரிக்கை துணை முதல்வரிடம் வைக்கப்பட்டது. அதனடிப்படையில் கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கு 21.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் மற்றும் துவக்க விழா கடையநல்லூரில் விரைவில் நடத்திட ஏற்பாடு செய்யப்படும். தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் வகையில் இந்த விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த நிதி ஒதுக்கீட்டிற்கான அறிவிப்பினை செய்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தொகுதி மக்கள் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு எம்.எல்..,தெரிவித்துள்ளார்.

Last Updated on Tuesday, 27 April 2010 06:59