Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவில்பட்டி குடிநீர்த் திட்டத்திற்கு ரூ.80 கோடி

Print PDF

தினமணி 27.04.2010

கோவில்பட்டி குடிநீர்த் திட்டத்திற்கு ரூ.80 கோடி

கோவில்பட்டி, ஏப்.26 : கோவில்பட்டி நகருக்கான தனி குடிநீர்த் திட்டத்துக்கு ரூ.79.87 கோடி மற்றும் ஆண்டு பராமரிப்புச் செலவுக்கு ரூ.196 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. இத் திட்டத்திற்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்கக் கோரி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி நகர்மன்றத்தின் அவசர கூட்டம் நகர்மன்றத் தலைவி மல்லிகா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் சந்திரமெüலி, ஆணையர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகர்மன்றத் தலைவி மல்லிகா பேசியதாவது:

கோவில்பட்டி நகராட்சியில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் துவங்கப்பட்டு, 33 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. இதனால், குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு, நகர மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிரமம் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 2008-09ஆம் ஆண்டு விலைவிகிதத்தின்படி, குடிநீர்த் திட்டத்திற்கு ரூ.50.16 கோடி மற்றும் ஆண்டு பராமரிப்புச் செலவு ரூ.140 லட்சத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

இந்த திட்டச் செயலாக்கத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளவும், குடிநீர்க் கட்டணம் மற்றும் வைப்புத் தொகை கட்டணத்தை உயர்த்துவதற்கும் நகர்மன்றம் 20-2-2009-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு, திருத்திய திட்ட அறிக்கை அரசின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், நிதி பற்றாக்குறையால் இத் திட்டம் திருப்பி அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கோவில்பட்டி மக்களின் பொதுநலன் கருதி மீண்டும் கோவில்பட்டி நகருக்கான தனி குடிநீர்த் திட்டத்தை அனுமதிக்க கேட்டு தற்போதுள்ள விலை விகிதத்தின்படி குடிநீர்த் திட்டத்திற்கு ரூ.79.87 கோடி மற்றும் ஆண்டு பராமரிப்புச் செலவு ரூ.196 என திட்ட மதிப்பீடு தயார் செய்து, அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, மத்திய, மாநில அரசுகளிடமிருந்து மானியமாகவும் மற்றும் கடனாகவும் பெற்று திட்டத்தை நிறைவேற்றிடவும், மானியம் போக கடனாகப் பெறுகிற எஞ்சிய தொகையைச் செலுத்துவதற்கு ஏதுவாக குடிநீர்க் கட்டணம் மற்றும் குடிநீர் வைப்புத் தொகை கட்டணத்தை உயர்த்துவதற்கும் நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

உறுப்பினர் தமிழரசன் பேசுகையில், தனி குடிநீர்த் திட்டத்திற்கான தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், ஆனால், குடிநீர்க் கட்டணம் மற்றும் வைப்புத் தொகை கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறினார்.

மேலும், 9 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக நகர்மன்றத்தின் பொருள்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது, மாதத்திற்கு இருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை, தவறுதலாக 9 நாள்களுக்கு என குறிப்பிட்டுள்ளதைக் கண்டிக்கிறேன் என்றார்.

உறுப்பினர் செல்வமணி குடிநீர்க் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று கூறி, நகர்மன்றத்தின் பொருள் குறிப்பு அடங்கிய தாளை கிழித்தெறிந்தார்.

நகர்மன்ற உறுப்பினர்கள் ராமர் மற்றும் கருணாநிதி ஆகியோர் பேசுகையில், கோவில்பட்டி நகரில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தனி குடிநீர்த் திட்டத்திற்கான தீர்மானத்தை அனைவரும் ஒன்றுசேர்ந்து நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, தனி குடிநீர்த் திட்டத்துக்கான நிதி ஒதுக்க வலியுறுத்துவது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத் திட்டம் அமல்படுத்திய பின்பு, குடிநீர்க் கட்டணம் மற்றும் வைப்புத் தொகை உயர்த்துவது குறித்து முடிவெடுப்போம் என்று அனைத்து உறுப்பினர்களும் கூறினர். கூட்டத்தில், நகராட்சிப் பொறியாளர் சையது அகமது, நகரமைப்பு அலுவலர் சேதுராஜன், சுகாதார அலுவலர் ராஜசேகரன், அலுவலக மேலாளர் பார்வதி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.