Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தாராபுரத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம்

Print PDF

தினமணி 27.04.2010

தாராபுரத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம்

தாராபுரம், ஏப். 26: தாராபுரத்தில் கடும் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக ஒரு குடம் குடிநீர் ரூ. 2-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் தாராபுரம் நகருக்கு குடிநீர் வழங்கும் அமராவதி ஆறு முற்றிலும் வறண்டுவிட்டது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் 8 தினங்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் குடிநீரும் குறைந்த அளவே கிடைக்கிறது.

தாராபுரம் நகரில் சுமார் 1.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வது அமராவது ஆறு மட்டுமே. நகராட்சிக்கு உள்பட்ட 30 வார்டுகளுக்கு நாள்தோறும் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை.

சில ஆண்டுகளுக்கு முன் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, தண்ணீர் எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகள் பாதிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி காவிரி ஆற்றிலிருந்து நாள்தோறும் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க குடிநீர் வடிகால் வாரியத்துடன் தாராபுரம் நகராட்சி ஒப்பந்தம் செய்தது. ஆனால் ஒப்பந்தம் செய்யப்பட்ட நாள்முதலாகவே, குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்கப்படுவதில்லை.

குடிநீர்க் குழாய்கள் உடைப்பு, மின்தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் சராசரியாக ஒரு நாளைக்கு 15 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் வாரத்தில் இரு தினங்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட காவிரியிலிருந்து விநியோகம் செய்யப்படுவதில்லை.

அமராவதி ஆற்றில் உள்ள கிணறுகள் மூலம் நாள்தோறும் 25 லட்சம் முதல் 30 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது அமராவதி ஆறும் முற்றிலும் வறண்ட நிலையில், இருக்கும் ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் வெறும் 10 லட்சம் லிட்டர் தண்ணீரே கிடைக்கிறது.

ஒரு நாளைக்கு 80 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், தற்போது 20 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இதனால் நகரின் பல பகுதிகளிலும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. நகர்ப் பகுதிகளில் 8 தினங்களுக்கு ஒருமுறையும், புறநகர்ப் பகுதிகளில் 10 தினங்களுக்கு ஒருமுறையும் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, இருசக்கர வாகனம் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு குடம் தண்ணீர் ரு. 2-க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து நகர்மன்றத் தலைவர் பி.சுப்பிரமணியன் கூறியது:

காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் சரிவர குடிநீர் கிடைக்காததால்தான் தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது. அமராவதி ஆற்றில் புதிய ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப்பட்டு, அந்த தண்ணீர் தற்போது ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

காவிரி குடிநீர் வரும் பகுதிகள் அனைத்திலும் நகராட்சி அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தீர்க்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.