Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காவிரி குடிநீர் வினியோகத்தில் குளறுபடி: திணறும் திருப்புத்தூர் பேரூராட்சி

Print PDF
தினமலர் 30.04.2010

காவிரி குடிநீர் வினியோகத்தில் குளறுபடி: திணறும் திருப்புத்தூர் பேரூராட்சி

திருப்புத்தூர்:திருப்புத்தூரில் காவிரி குடிநீர் திட்டம், முறையாக செயல்படுத்தப்படாததால், வினியோக குளறுபடி நிலவுகிறது. ஊழியர் பற்றாக்குறையால் புதிய இணைப்புகள் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.திருப்புத்தூர் பேரூராட்சியில் கடந்த ஆண்டு, 16 கோடி ரூபாயிலான, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், ஆறு மேல்நிலை தொட்டிகள் மூலம், தினமும் 12 லட்சம் லிட்டர் குடிநீர் ஏற்றப்படுகிறது. ஆனாலும், நகரின் குடிநீர் தேவை பூர்த்தியாகவில்லை.அவலம்:பழைய 1, 200 இணைப்புகளுக்கு மட்டும் தினமும் ஒரு மணி நேரம், வினியோகிக்கப்படுகிறது. மேடான பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில்லை. மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவதால், பல இணைப்புகளில் 'காற்று' மட்டுமே வருகிறது. இக்குளறுபடியால் பற்றாக்குறை ஏற்பட்டு, ஒரு குடம் மூன்று ரூபாய் 50 காசு என, விலை கொடுத்து வாங்கும் அவலம் தொடர்கிறது.புதிய இணைப்பு கோரி 1, 000 பேர் மனு செய்தும், மூன்று மாதமாக கிடப்பில் உள்ளது.

மொத்தம் 5, 000 இணைப்புகளை இலக்காக கொண்டுள்ள, குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தேவையான ஊழியர்கள், பேரூராட்சியில் இல்லை. குடிநீர் வினியோகம், நூறு அடி குழாய்கள், 130 மின் மோட்டார் தொட்டிகள், 750 தெரு விளக்குகள், 75 பொது குழாய்களை பராமரிக்க ஒரு எலக்ட்ரீசியன் மட்டுமே உள்ளார். வால்வு ஆப்பரேட்டர், பிட்டர், பிளம்பர், பம்ப் ஆப்பரேட்டர், மின் ஊழியர்கள் இல்லை. இந்த ஊழியர்களை உடனே நியமிப்பது அவசியம். இல்லாதபட்சத்தில், குடிநீர் திட்டத்தின் நோக்கம் முழுமையடையாது. 'கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலை' ஏற்படும்.

இதுகுறித்து செயல் அலுவலர் மங்களேஸ்வரன் கூறுகையில், ''கடந்த 1971 ல் பழைய குடிநீர் திட்டம் செயல்பாடுத்தப்பட்ட போது, குடிநீர் வாரிய ஊழியர் சிலர், பேரூராட்சிக்கு மாற்றப்பட்டனர். இதில் பலர் ஓய்வு பெற்று விட்டனர். காவிரி குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற, போதிய ஊழியரை நியமிக்க வேண்டும்,'' என்றார்.பேரூராட்சி தலைவர் சாக்ளா கூறுகையில், ''ஊழியர் இன்றி, புதிய இணைப்பு வழங்க முடியவில்லை. பராமரிப்பு பணிகளும் சிரமமாக உள்ளது. தனியார் மூலம் புதிய இணைப்பு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். கூடுதல் ஊழியரை நியமிக்க, அரசை வலியுறுத்தியுள்ளோம். விரைவில்புதிய இணைப்புகள் வழங்கப்படும். மாலையிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படும்,'' என்றார்.

Last Updated on Friday, 30 April 2010 06:31